இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதை குறைத்தது கனடா

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர விரிசல்களின் எதிரொலியாக இந்திய மாணவர்களுக்கு நுளைவு அனுமதி வழங்கவதை கனடா மிக அதிகளவு குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்ரம்பர் மாதம் 14,910 மாணவர்களுக்கே கனடா விசா வழங்கியுள்ளது. அதற்கு முன்னைய ஆண்டு 108,940 மாணவர்களுக்கு கனேடிய அரசு நுளைவு அனுமதியை வழங்கியிருந்தது. அதாவது நுளைவு அனுமதி வழங்கப்படுவதில் 86 விகித வீழ்ச்சி கண்டுள்ளது.

கனடாவின் வன்கூவர் பகுதியில் வைத்து கடந்த ஜுன் மாதம் சீக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான மோதல்கள் ஆரம்பமாகியிருந்தன. இந்தியா அதனை மறுத்திருந்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் தூதுவர்களை அவர்களின் நாடுகளில் இருந்து வெளியேற்றியருந்தன.

புதுடில்லி 41 கனேடிய இராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தது. அவர்களின் வெளியேற்றம் என்பது மாணவர்களுக்கான நுளைவு அனுமதியை வழங்குவதில் அதிகாரிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருந்தது. அது தற்போது மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளதாக த றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.