சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் ஈழவிடுதலை சார் நூல்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 43ஆவது பத்தகக் கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு – எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

சென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றது. அரசிற்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவுனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம் கொண்டிருக்கின்றது.

தற்போதைய புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான நூல்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்துடன் கூடிய ஆதரவு மற்றும் எதிரான புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின்றன என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஈழப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளை கடந்த நிலையில் அது குறித்த தேடல் வாசகர்களிடம் இருந்து வருவதே விற்பனை அதிகரிப்பிற்குக் காரணம் என்கின்றனர் பதிப்பாளர்கள். இந்நிலையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமது ருவிற்றர் பக்கத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply