இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், அவரின் மனைவியும் 3 நாட்கள் விஜயமாக இன்று இந்தியா வந்தடைந்தனர்.

இன்று காலை 11.40 மணிக்கு மனைவியுடன் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ட்ரம்ப் தம்பதிகளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் வரவேற்றார்.

விமான நிலையத்திலிருந்து வந்து சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த ட்ரம்ப் இற்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அங்கு ட்ரம்ப் மற்றும் மனைவி இருவரும் ராட்டையில் நூல் நூற்றனர்.

பின்னர் மதியம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தாஜ்மகாலிற்கு விஜயம் மேற்கொண்ட ட்ரம்ப் தம்பதிகளை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3ஆயிரம் கலைஞர்கள் திரண்டு வரவேற்றனர்.

பின்னர் ட்ரம்பும் மனைவி மெலானியாவும் தாஜ்மகால் வரவேற்பு புத்தகத்தில் தங்களின் வருகையை பதிவு செய்தனர்.

ட்ரம்ப் கருத்துக் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புகையில், இந்தியாவிற்கு இந்த கிரகத்தின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா எதிர்நோக்குகின்றது. இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ஆயுதங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதனை இப்போது நாங்கள் இந்தியாவுடன் கையாள்கின்றோம்“ என்றார்.