இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இருதரப்பு விவகாரம்: பொம்பியோவிற்கு சீனா பதில்

407 Views

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை இருநாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என அமெரிக்க அமைச்சர் மைக் பொம்பியோவிற்கு சீனா பதிலளித்துள்ளது.

சீனா – இந்தியா எல்லை விவகாரத்தில் 3ஆவது நாட்டின் தலையீட்டை தாம் விரும்பவில்லை. மைக் பொம்பியோ பழைய பொய்களையே திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார். பன்னாட்டு உறவுகள் குறித்த விதிகளை அவர் மீறி வருகின்றார் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

2+2 உரையாடலில் மைக் பொம்பியோ “இந்திய மக்களின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இந்திய மக்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்று கூறியிருந்தார். மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிப் பேசும் போது, “சீனா ஜனநாயகத்தின் நண்பன் அல்ல, சட்டத்திற்கும் கட்டுப்பட்டதல்ல, வெளிப்படைத் தன்மை, சுதந்திரம் ஆகியவற்றிற்கு எதிரானது.” என்று கூறியிருந்தார்.

பொம்பியோவின் மேற்படி கூற்றிற்கு டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் கடுமையான கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இருதரப்பு உறவுகளைக் கட்டமைப்பது பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை, மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதையே சீனா பரிந்துரைத்து வருகின்றது. பிறரின் நியாயமான உரிமைகள் விவகாரத்தில் தலையீடு கூடாது.

எல்லைப் பிரச்சினை இந்தியாவிற்கும், சீனாவிற்குமான இருதரப்பு உறவு. இருதரப்புகளும் எல்லைப் பகுதியில் படைகளை வாபஸ் பெற்று பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் இந்தியாவும் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களையும் அறிவும், திறமையும் கொண்டது. இதில் 3ஆம் நாடு தலையிட இடமில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சீன மக்கள் மற்றும் வரலாற்றின் தெரிவு. இந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் சீன மக்கள் வைரஸிற்கு எதிரான போரில் வென்றுள்ளனர். இதையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான சீன மக்களின் நம்பகத் தன்மை 90%ஐ கடந்திருப்பதாக பன்னாட்டு திறன் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

கொரோனா குறித்து அமெரிக்கா இன்னமும் சீனாவை குறைகூறி வருகின்றது. அது உண்மைகளை திரித்து மக்களைத் திசை திருப்பும் செயலாகும். வைரஸிற்கு எதிராக சீனாவின் நடவடிக்கைகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியதே. அமெரிக்கா தங்கள் செயற்பாடுகளில் கவனம் செலுத்தி கொரோனாவிலிருந்து மக்களை மீட்கட்டும். பிறரை குறை கூறுவதை நிறுத்தட்டும்.” என்று சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply