சீனாவின் ஆய்வுக்கப்பலான சீ யான்-6 என்ற கப்பல் கடந்த புதன்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலின் வருகையை தடைசெய்யுமாறு இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகித்தபோதும் இலங்கை அதனை புறக்கணித்துள்ளது. இந்த கப்பல் தொடர்பில் தனது எதிர்ப்புக்களை காண்பிக்கும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் இந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற இந்துசமுத்திர பிராந்திய வளைய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதையும் தவிர்க்க முற்பட்டிருந்தார்.
எனினும் சீன கப்பலின் வரவை சிறிது காலம் தாமதப்படுத்துமாறு கேட்ட பின்னர் அவர் இலங்கை வந்திருந்தார். ஆனால் கப்பல் நவம்பர் மாதம் வருவதாக இருந்தபோதும் இலங்கை அரசு அதற்கு ஒக்டோபர் மாதம் அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த கப்பல் இந்து சமுத்திர பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் 80 நாட்கள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் அது 12,000 கடல் மைல் தூர வீச்சுக்களை கண்காணிக்ககூடியது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் யுவான் வாங் -5 என்ற ஆய்வுக்கப்பல் இலங்கை வந்தது இந்திய மட்டத்தில் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருந்தது.
இதனிடையே, இலங்கைக்கு தென்கொரியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.