இந்தியாவை விட்டு வெளியேற காஷ்மீர் தலைவர்களுக்கு தடை?

431 Views

தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரான அல்தாஃப் அஹ்மத் வாணி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, டுபாய்க்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் திகதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது அல்தாஃப் அஹ்மத் கைதானார்.  பின்னர் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று  தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான அல்தாஃப் அஹ்மத் வாணி என்கிற கலூ, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும்  டுபாய் செல்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

“என் மருமகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக, குடும்பத்தினருடன் டுபாய்க்கு செல்ல இருந்தோம். அதற்கு நான் மாலை விமானத்தைப் பிடிக்க வேண்டும். நான் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக குடியேற்றத் துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தேன்.  கடைசியாக எனக்கு நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக” அல்தாஃப் அஹ்மத்   தி இந்து செய்தி நிறுவனத்திடம்  கூறியுள்ளார்.

மேலும், 2021 ஆண்டு மார்ச் மாதம் வரை, நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று குடியேற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

“உள்துறை அமைச்சகம் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்திருப்பதாக தெரிகிறது.  இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டேன். ஆனாலும், என் பயணத்திற்கான தடை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது துன்புறுத்தலுக்கு ஈடான செயல். வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட தலைவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டால், அவர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 38 தலைவர்களை, நாட்டை விட்டு வெளியேற உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply