இந்தியாவில் வெள்ளப்பெருக்கு 22 படையினர் உட்பட 100 இற்கு மேற்பட்டவர்களை காணவில்லை

இந்தியாவின் வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 100 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதுடன், 14 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் மீட்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அங்கு பெய்துவரும் கடும் மழையை தொடர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருகியதால் பல ஆறுகள் உடைப்பெடுத்துள்ளன. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த மாநிலத்தின் வெவ்வெறு பகுதிகளில் 3000 இற்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளும் சிக்குண்டுள்ளதால் அவர்களை மீட்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மீட்பு நடைவடிக்கைக்கு இந்திய அரசு முழு உதவிகளையும் வழங்கும் என மாநில முதல்வரை தொடர்புகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை (4) தெரிவித்துள்ளார். பல இடங்களில் வெள்ளம் 15 தொடக்கம் 20 அடிகள் வரை உயர்ந்துள்ளது. அங்த பகுதியில் நிலைகொண்டிருந்த இந்திய படையினரும் 23 பேர் காணாமல் போயிருந்தனர். எனினும் பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (5) வரையிலும் 10,000 இற்கு அதிகமான மக்கள் அந்த பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு 190 இற்கு மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஹிமாலயா பகுதியில் உள்ள இந்த மாநிலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு. கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 24 பேர் அங்கு கொல்லப்பட்டிருந்தனர்.