இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்

அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு. ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது அப்போது டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 பேருந்துகள், 2பொலிஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் வெளியாட்கள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவர்களைப் பிடிக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிசார் தீவிர சோதனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.

இதை எதிர்த்தும் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தினர் காலை 11.30 மணியளவில் சென்னை, சென்றல் ரயில் நிலையத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

நுங்கம்பாக்கம் லொயலா கல்லூரி மாணவர்கள் ஒரு மணி நேரம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

ஐ.ஐ.ரி மாணவர்கள் கலெக்டிவ் அமைப்பினரும் பேரணியை நடத்தினர். கஜேந்திரா சர்க்கிள் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல கோயம்புத்தூர், திருச்சி, திருவள்ளுர் ஆகிய இடங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.