ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அக்கட்சியின் போசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற மிக முக்கிய சந்திப்பொன்று இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவும், சுதந்திரக்கட்சியும் கூட்டிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையின் போது, பொதுஜன பெரமுனவின் போசகர் பசில் ராஜபக்ஷ, கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் பற்றிய சதவீதத்தினை குறிப்பிட்டதோடு தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள சிறுபான்மை மற்றும் இடது சாரி தரப்புக்கள் ஆகியவற்றின் வாக்கு வங்கியையும் முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுனவுடன் இணைந்தால் மேலும் பலமான அணியாக உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியானது பாரம்பரியம் வாய்ந்ததாகும். ஆகவே அக்கட்சியின் சில தனித்துவங்களை விட்டுக்கொடுக்க முடியாது.குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் கை அல்லது வெற்றிலை இலச்சினையில் களமிறங்குவதே பொருத்தமானதாகும்.
எமது கட்சியின் அதிகமான உறுப்பினர்களும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ராஜபக்ஷ தரப்பில், இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்திலேயே களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அத்துடன் இந்த சின்னம் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இச் சின்னம் மக்களுக்கு பழக்கப்பட்டதாக இருக்கின்றது.
ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் தாமரைமொட்டுச் சின்னத்தினை பயன்படுத்துவோம். அடுத்த பொதுத்தேர்தலில் நாம் கை அல்லது வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரி, அதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுமானால் சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்று இக்கட்சியின் சின்னத்தில் களமிறங்குவதற்கு கூட வாய்ப்பளிக்க தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
எனினும், ராஜபக்ஷவினரின் தரப்பில் தாமரைமொட்டுச் சின்னத்தினை கைவிடுவதற்கு தயாரில்லாத வகையிலான கருத்துக்களே தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டன. இதனால் ஜனாதிபதி மைத்திரிபால நாளை மறுதினம்(நாளை) கூடவுள்ள தனது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிவிட்டு பதிலளிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இச்சந்திப்பானது இணக்கப்பாடுகளின்றி நிறைவுக்கு வந்துள்ளது.
எனினும் இருதரப்பிலும் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து பரந்து பட்ட கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் என்ற கொள்கை ரீதியான இணக்கப்பாடு காணப்படுவதாக அறிய முடிகின்றது.
எனினும் நாளைய தினம் நடைபெறும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுகூட்டத்தின் பின்னரே அடுத்த கட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் சுதந்திரக்கட்சியை பொறுத்தவரையில் ஜனாதிபதி மைத்திரிக்கு அடுத்த ஆட்சியில் எவ்வாறான பதவி வழங்கப்படும் ஏனைய உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகள் கிட்டுமா என்ற விடயங்களை விடவும் தற்போது சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தினை பாதுகாப்பதே அடிப்படைக் குறிக்கோளாக கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்குள்ளது என்றும் அக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார்.