‘ஆளுமையுள்ள தலைமை தொடர்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்தவர்’ தலைவர் பிரபாகரன்

1,052 Views

இலங்கையின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு ‘புரட்சியாளன்’. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவரை பயங்கரவாதியாகவும் இலங்கை அரசு உருவகப்படுத்தியுள்ள போதிலும், இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அவருடைய பங்கு தவிர்க்க முடியாததாகப் பதிவாகி இருக்கின்றது.

அது மட்டுமல்ல, தமிழினத்தின்  நவீனகால வரலாற்றிலும் அவர் ஓர் அதி உன்னத இடத்தைப் பெற்றிருக்கின்றார். தமிழர்கள் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அரசர் காலத்தில் தமிழ் மன்னர்களினதும் தமிழர்களினதும் வீரம் சிறந்து விளங்கியது. முடியாட்சி சகாப்தம் முடிவடைந்து குடியாட்சி தலையெடுத்ததன் பின்னர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவரே தமிழரின் வீரத்திற்குப் புதிய இலக்கணத்தை வகுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.

தலைவர் பிரபாகரனின் தலைமை என்பது தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை அரசியல் சூழலில் இயல்பாக முகிழ்த்ததொன்றாகும். அந்த வகையில் இயற்கையின் படைப்பாக உருவாகிய அவருடைய தலைமை திகழ்கின்றது. அவரது ஆளுமையும், வீரமும், கொள்கைப் பிடிப்பும், செயல் வல்லமையும் கேள்விக்கு உட்படுத்த முடியாதவை.

அரசியல் மற்றும் குடியியல் அழுத்தங்களும் அவருடைய கொள்கைப் பிடிப்பையும் உறுதியையும் துணிவையும் தளர்த்த முடியாமல் தளர்ந்து போயின. ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அவருடைய போராட்ட வாழ்க்கை சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.

தமிழர்களுக்கென ஒரு தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் ஆயுதப் போராட்டத்தைத் தழுவியிருந்தார். ஆனாலும் தனிநாட்டுக் கோரிக்கை என்பது அவரால் உருவாக்கப்பட்டதல்ல. அது தமிழ் மக்களின் அபிலாசை. சாத்வீக வழிகள் யாவும் பயனற்றுப் போனதன் விளைவாக அந்த மக்கள் வேறு வழியின்றி தனிநாட்டுக் கொள்கையை அவர்கள் வரித்துக் கொண்டார்கள்.

தமிழ் மக்களின் அந்தத் தமிழ்த்தேசிய கனவை நனவாக்குவதற்கான செயல்வழித் தடத்தில் தன்னிகரற்ற வகையில் பயணித்த ஒரு மா மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

தலைவருடைய தலைமைத்துவப் பண்பும், ஆளுமையும் வீரமும், கொண்ட கொள்கை மீதான இரும்புப் பிடியும், தனது இயக்கத்தின் மீதும், அதன் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றுறுதியும் சமூகத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சிறந்ததொரு முன்மாதிரியே.

தற்போது  தலைவர் பிரபாகரனைப் போன்ற ஓர் ஆளுமைமிக்க அரசியல் தலைமையின்றி தமிழினம் தவித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும், அவர்களின் அரசியல் உரிமைகளும் எட்டாக்கனிகளாகிவிடுமோ என்று அச்சம் கொள்கின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது.

நாடாளுமன்ற அரசியலை இலக்காகவும் தேர்தல்களின் வெற்றியைப் படிக்கல்லாகவும் கொண்டு செயற்படுகின்ற தமிழ்த் தலைவர்களும், வேறு வழியின்றி அவர்களின் பின்னால் அணிதிரண்டுள்ள தமிழ் மக்களும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 66 ஆவது பிறந்த தினம் அவருடைய ஆளுமை மிக்க தலைமையைப் பற்றி சிந்திப்பதற்குத் தூண்டியிருக்கின்றது.

அவரைப் போன்ற உறுதியும், துணிவும் கொள்கைப் பிடிப்பும், செயல் வல்லமையும் கொண்டவர்களாக தமிழ் அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். அத்தகைய தலைவர்களை உருவாக்குவதற்கு களத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் தெளிந்த சிந்தனையோடு முன்வர வேண்டும்.

இதுவே தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அளிக்கக் கூடிய சிறந்த கைமாறாகும். அதுவே அவருக்கான சிறந்த வாழ்த்தாகவும் அமையும்.

தலைவர் மேதகு பிரபாகரனின் உள்ளத்து சிந்தனைகளில் சில….

மாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.

நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்கலளது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம்.

ரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு….. ”

“…இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.”

Leave a Reply