ஆப்கானிஸ்தானில் மகள்களின் கல்விக்காக 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நிரம்பி காணப்படும் ஆப்கானிஸ்தானில் தனது மகள்களுக்காக 12 கிலோ மீட்டர் பயணம் செய்து அவர்கள் கல்வி பயில துணையாய் இருந்து வருகிறார் தந்தை ஒருவர்.

ஆப்கனில் தலிபான்களின் ஆதிக்கத்தால் நாட்டில் பல இடங்களில் பெண்களுக்குக் கல்வி என்பது எட்டாக் கனியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் தலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் சிலர் தங்கள் பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் துணை நிற்கின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த மியா கான். இவர் தனது பெண் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஸ்வீடன் நிறுவனத்தால் நடத்தப்படும் நுரானியா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் பயணம் செய்து அவர்களை உரிய நேரத்தில் வகுப்பில் சேர்க்கிறார். பின்னர் சில நேரம் அங்கேயே தங்கி மீண்டும் மகள்களை அழைத்து வருகிறார்.

இதுகுறித்து மியா கான் கூறும்போது, ”நான் படிக்காதவன். ஆனால் எனது மகள்கள் கல்வி பெறுவது மிகவும் முக்கியம். எங்கள் பகுதியில் பெண் மருத்துவர்களே இல்லை. எனது மகன்களைப் போல எனது மகள்களும் கல்வி பெற வேண்டும் என்பது என் கனவு” என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியை ‘Swedish Committee for Afghanistan’ என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் மியா கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply