ஆணையகத் தீர்மானங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் உரிமைகளை முன்னெடுத்தல்

281 Views

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டுக்கான 46ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல், மனித உரிமைகளை மேம்படச் செய்தல் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அதனைச் செயற்படுத்தலுக்கான ஏழு தீர்மானங்களும் விதந்துரைக்கப்பட்டுச், சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே  ‘மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான தனது உரையில்,

  1. மோதலின் பின்னரான 12 ஆண்டுகள் குறித்த மனித உரிமைகள் ஆணையக உயர் ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. இது குறித்து சிறீலங்கா அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டையும் மதிப்பீடு செய்வதிலேயே இந்தப் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் காணமுடியும். இதற்கான உறுதிப்பாட்டின் மூலம் நாம் வழிநடத்தப்பட வேண்டும்.
  2. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான ஆதரவு, மற்றும் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளுக்கு உறுதியளித்தல், ஆகிய இருபிரதான தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது.
  3. இவை தவிர வேறு தீர்வுகளில்லை. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு உட்பட தமிழ்ச்சமூகத்தின் உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகப் பங்களிப்புச் செய்யும். என உறுதியாக நம்புகின்றோம். எனவே தமிழ்ச் சமூகத்தின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.
  4. நல்லிணக்கச் செயல்முறைகள் மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாசைகளுக்கு தீர்வு காண வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையைக் கேட்டுக் கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாடுகளும் தங்கள் புவிசார் நலன்கள், இராணுவச் சந்தை நலன்கள் என்பவற்றின் பின்னணியிலேயே இம்முறையும் தமிழர் பிரச்சினையை அணுகியுள்ளதை இந்தியப் பிரதிநிதியின் பேச்சும் உறுதிப்படுத்துகிறது.  இது ஈழத்தமிழர்களுடைய உரிமைகளை முழு அளவில் உறுதி செய்யாத நிலையே இம்முறையும் தொடர்வதை வெளிப்படுத்தியுள்ளது.  இனஅழிப்பு என்ற வகைமைக்குள் அமைய வேண்டிய அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாட்டை மட்டுப்படுத்திய செயலாகவும் இவ்வறிக்கை உள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் மனித உரிமைக்காக இதுவரை முன்னெடுக்கும் தமிழர் அமைப்புக்களும் தங்கள் பணிகளைச் சரிவரசச் செய்யாததின் விளைவாகவும் கருத இடமுண்டு.

ஆயினும் ஈழத்தமிழர் உரிமைகள் மீட்புக்கான புதிய களமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தான் இலங்கையில் தலையிடுவதற்கு முன்வைத்துள்ள மூன்று காரணங்களை முன்னெடுக்க வேண்டிய நடைமுறைத் தேவையும் உள்ளது.  அவையாவன :-

  1. தொடர்ந்தும் பாழாக்குதலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டு வரும் குடும்பங்கள், சிறுவர்கள், உறவினர்களின் அன்புக்குரியவர்களின் தலைவிதிக்குரிய உண்மைகளைக் கண்டறிந்து நீதி வழங்கி அவர்களுக்கான உடனடியானதும், அடிப்படைத் தேவையானதுமான மறுவாழ்வினை அளிக்கும் முயற்சிகளில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தோல்விகள்.
  2. 2030ஆம் ஆண்டைக் கால எல்லையாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான பொருளாதாரம், நிலையான அமைதி என்பவற்றுக்கான முயற்சிகளுக்குத் தோல்வியை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் அலட்சியப்படுத்தி, மீண்டும் தொடர்ச்சியான மனித உரிமை வன்முறைகளை ஊக்கப்படுத்தி எதிர்காலத்தில் யுத்தங்கள் உருவாக தூவப்படும் விதைகளாக உள்ள செயற்பாடுகள்.
  3. மனித உரிமைகள் ஆணையகத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அவற்றின் முரண்பாடுகள் ஏற்படாதவாறு மக்களைப் பாதுகாக்கும் அவற்றின் தலையாய கடமைப்பணிக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் தடைகள்.

இந்த மூன்று முக்கிய காரணிகளுக்காக அனைத்துலகச் சட்டங்களுக்கு கீழ் சனநாயக வழிகளில் போராட வேண்டிய களமாக இன்றைய ஈழத்தமிழர்கள் வாழ்வமைகிறது.

அதே வேளை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி நீதியை நிலைநாட்ட சிறீலங்கா மேல்  குற்றவியல் நீதிமன்ற விசாரணை விதந்துரைக்கப்பட வேண்டுமென நெறிப்படுத்தியமை உடனடியாக அறிக்கையில் நடைமுறைப்படுத்தப்படாத போதிலும், உறுப்புரிமை நாடுகள் சிறீலங்காவை அனைத்துலகக் குற்றவியல் குற்றவிசாரணை நீதி மன்றத்திற்கு கொண்டு போவதற்குப் பரிந்துரைப்பதற்கு முன்னதாக ஏற்புடைய எல்லை கடந்த அல்லது எல்லைக்குட்பட்ட நீதி விசாரணைகளை சிறீலங்காவுள் ஊக்கப்படுத்தி குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் அறிக்கையில் பேசப்பட்டுள்ளது.

உறுப்புரிமை நாடுகள் இத்தகைய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படக் கூடிய சான்றாதாரங்களைக் கொண்டவர்களின் மேலானவர்களின் சொத்துக்களை உறைய வைத்தல்,  அவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல், போன்ற தடைகளை செயற்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலையும், அனைத்துலக விசாரணைக்கான முறைமைகளையும் ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் அறிக்கை மனித உரிமைகளை ஒழுங்குபடுத்திப் பேணுவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இவைகளெல்லாம் நடைமுறையாக்கப்படுவதற்குத்

  1. தமிழர்களின் அறிவார்ந்த நிலையிலான செயற்பாடுகளையும்,
  2. தமிழ் மக்களின் பேரெழுச்சியையும்,
  3. பொருளாதாரத்தில் தமிழர்களின் சமுக மூலதனங்களையும்

எந்த அளவுக்குத் தமிழர்கள் பெருக்கிக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத் தீர்மானங்கள் வழியாக ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்கான ஆற்றலாக வளர்த்துக் கொள்ளப்படலாம் என்பதே இலக்கின் முன்மொழிவாக உள்ளது.

Leave a Reply