ஆட்சி மாற்றம் ஏற்படப்போகின்ற இறுதித் தருணத்திலேயே பட்டதாரிகளுக்கு வேலை – சந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி தங்களுடைய சுகபோக வாழ்க்கையை மட்டும் நோக்காக கொண்டுசெயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மட்டக்களப்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய அரசியல் சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மக்களுக்குத் தேவையாக இருப்பது அபிவிருத்தி ஒன்று தான். அதனால் வரவிருக்கின்ற தேர்தலில் வெல்லக்கூடிய ஒரு அரசாங்கத்தை ஆதரித்து மக்களின் அபிவிருத்திப் பணிகளை கொண்டு
செல்வது தான் எங்களுடைய முக்கிய நோக்கமாகும். வெறுமனே தேசியத்தை கதைத்து இன்னும் 25வருடங்கள் பின்னோக்கி செல்லாமல் நடைமுறைக்கு சாத்தியமான வேலைகளைச் செய்ய
வேண்டும்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தான் பட்டதாரிகள் 58ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.தற்போதிருக்கின்ற அரசாங்கம் உள்வாரி, வெளிவாரி என பட்டதாரிகளை பிரித்துப் பார்ப்பதோடு மட்டுமல்லாது மக்களையும் தமிழ், சிங்களம்,முஸ்லிம் என பிரித்தே பார்க்கின்றது. அனைத்து மக்களையும் ஒரே பார்வையில்
பார்க்கின்ற தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டும் தான்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் கிழக்கின் உதயம் என்ற அமைப்பை உருவாக்கி மட்டக்களப்பிற்கு தேவையான சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அன்று மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளையே நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் எந்தவொரு அபிவிருத்திகளும் நடக்கவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்படப்போகின்ற இறுதித் தருணத்திலேயே பட்டதாரிகளுக்கு வேலை வழங்குதல்,தொழில் வாய்ப்பு வழங்குதல் போன்ற கண்துடைப்பான வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.

எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒருவருட காலத்திற்குள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவார்கள் என நாங்கள் உறுதிமொழி அளிக்கின்றோம். கோத்தபாய அவர்களை நூறுவீதம் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில் தான் குளங்கள் கட்டப்பட்டன,பாதைகள் போடப்பட்டன எனவும் தற்போதுள்ள அரசாங்கம் எந்தவித அபிவிருத்திகளையும் செய்யவில்லை எனவும் நாங்கள் ஒவ்வொரு கிராமங்களாக செல்கின்றபோது மக்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதிகளின் குறைபாடுகளை கேட்டறிந்து கூடிய முக்கியத்துவம் அளிக்குமாறு எங்களுடைய தலைமைப்பீடம்; கூறியிருக்கின்றது. ஒவ்வொரு கிராமங்களாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்திருக்கின்றோம். எங்களுடைய ஆட்சி
வந்த பின்னர் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களுடைய வேலையாகும். வந்த பின்னர் நான்கரை வருடங்களை வீணாக்கி அதன் பின்னர் வேலை செய்வது எங்கள் நோக்கமல்ல. ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்திலேயே எங்களுடைய வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

மட்டக்களப்பில் 75வீதமான தமிழர்கள் இருக்கின்றோம்.ஆனால் 25வீதமாக இருக்கின்ற சிறுபான்மை இனம் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்றதோ அதனுடன் இணைந்து அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மக்களை ஏமாற்றி தங்களுடைய சுகபோக வாழ்க்கையை மட்டும் தீர்மானித்துக்கொள்கின்றனர்.

இனிவரும் காலங்களில் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஆகும். தமிழ்க் கிராமங்களில் அபிவிருத்திகள் நடக்க வேண்டும்.

வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெற்ற பின்னர் வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு தமிழ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை பாராளுமன்றம் அனுப்பி அவர் மூலம் மட்டக்களப்பிற்கு அபிவிருத்திகளை கொண்டுவருவதே தமிழ் மக்களின் இலக்காக இருக்கின்றது. அந்த மக்களின் ஆசைக்கிணங்கவே நாங்கள் எங்களுடைய தலைமைப் பீடத்துடன் பேசி ஒவ்வொரு கிராமங்களாக சென்று தேவைகளை அறிந்து கொண்டிருக்கின்றோம்.