ஆட்சி அமைக்கப்போவது யாா்? இரு கூட்டணிகளும் நாளை டில்லியில் ஆலோசனை

modi rahul ஆட்சி அமைக்கப்போவது யாா்? இரு கூட்டணிகளும் நாளை டில்லியில் ஆலோசனை400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இன்று இரவு நிலவரப்படி பாஜக தனித்து 239 வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 290+ இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 90+ இடங்களை தனித்து வசப்படுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 235 தொகுதிகளை எட்டுகிறது.

இந்தச் சூழலில் ஆட்சி அமைப்பது பற்றி புதன்கிழமை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி கலந்து கொள்கிறது. மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சியின் என்டிஏவில் அங்கம் வகித்தன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் இப்போது கிங் மேக்கர்களாக கவனம் ஈர்த்துள்ளனர்.

235 தொகுதிகளை வசப்படுத்தி வலம் வரும் இண்டியா கூட்டணி இந்த இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்” என்று கூறினார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக் கூட்டணி, இண்டியா கூட்டணி தனித்தனியாக நாளை புதன்கிழமை ஆலோசனை நடத்துகின்றன. இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.