கிழக்கு மாகாணத்தின் தற்போதை நிலைமையினை பார்க்கும்போது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் பனிப்போரை நிலைமையினை வெளிப்படுத்தி உள்ளதுபோன்ற நிலைமையினை காணமுடிகின்றது.
இன்றைய நிலையில் கிழக்கில் நடைபெறும் செயற்பாடுகளை கடந்துசெல்லமுடியாத நிலைமையே காணப்படுகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலைமையினை தொடர்ந்து வெளிக்கொணரவேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பதை யாரும் இலகுவில் கடந்துசெல்லமுடியாது என்பதை அண்மைக்காலக செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறிப்பா மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை காணி பிரச்சினையென்பது வெறுமனே ஒரு பகுதியினரின் காணப்பிரச்சினையென்ற தொனியில் கடந்துசெல்லமுடியாது என்பதை அனைவருக்கும் இன்று உணரும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பது டட்லி சேனநாயக்க காலம் தொடக்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 1956ஆம் ஆண்டு இதன்காரணமாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டமையே சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக கருதப்படுகின்றது. 1960ஆம் ஆண்டு வரை வடகிழக்கில் எந்த தொகுதியிலும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான சரித்திரம் இல்லை. 1960ஆண்டு மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்தலில்தான் முதன்முதலாக அம்பாறை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி கை சின்னத்தில் போட்டியிட்ட விஜேயசிங்க விஜயபாகு என்ற சிங்களவர் பாராளுமன்ற உறுப்பினரானார்.
1961ஆம் ஆண்டு ஏப்ரல்,10இல் மட்டக்களப்பு மாவட்டத்துடன் ஒன்றாக இருந்த அம்பாறை பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் என வர்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1977ஆம் ஆண்டு யூன்,24 ஆம் திகதி முதன் முதலாக தமிழர் தலைநகரமான திருகோணமலை மாவட்டத்தில் சேருவெல என்ற தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டி. லீலரெட்ண என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானார்.
1989,பெப்ரவரி,20 தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் 1994,ஆகஷ்ட்,20, இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மொத்தம் 06, ஆசனங்களில் 04, சிங்களப்பாராளுமன்ற உறுப்பினர்களும், 02, முஷ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவானார்கள்.
1994ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அம்பாறை மாவட்ட நிலைமை சிங்கள, முஷ்லிம் அத்துமீறிய குடியேற்றங்கள் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.அம்பாறை மாவட்டத்தினை பொறுத்த வரையில் 1960ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் 29தமிழ் கிராமங்கள் காணாமல்போயுள்ளன.அம்பாறையில் தமிழர்களின் வரலாற்று சுவடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று வடகிழக்கு தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டம் சொல்ல வேண்டியதில்லை 1977இல் சேருவெல சிங்கள தொகுதி உருவாக்கப்பட்டு இன்று வரை அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களால் தமிழர்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அங் இன்றுமும் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குள் விகாரை அமைப்பகள்,
திட்டமிட்ட குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நிலத்தில், 23 விகாரைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் 31 விகாரைகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று வனப்பாதுகாப்பு திணைக்களம் 43435 ஏக்கர் காணியினையும், தொல்பொருள் திணைக்களம் 2605 ஏக்கர் காணியினையும், புல்மோட்டை அரசிமலை பௌத்தப்பிக்கு கிழக்கு செயலணி 2908 ஏக்கர் காணியினையும் ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அண்ணளவாக முப்பதாயிரம் ஏக்கர் காணியை வனவிலங்கு திணைக்களம் தங்களுக்குரியது என தெரிவித்து வருவதால் 28 ஆயிரம் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி பண்ணையாளர்கள் அவதியுற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஏறக்குறைய 74, வீதமும், இஷ்லாமியர் 25, வீதமும், சிங்களவர் 1, வீதமாகவும் உள்ள நிலையில் (2023, புள்ளிவிபரம் எடுத்தால் தமிழர் வீதம் இன்னும் குறையலாம்)சிங்களவர்களின் வீதத்தினை அதிகரித்து எதிர்காலத்தில் அரசியல் ரீதியான இருப்பினை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
தற்போது மயிலத்தமடு, மாதவனை, கெவிளியாமடு ஆகிய மேச்சல் தரைகளை இலக்கு வைத்து அம்பாறை, பொலன்றுவை, மொன்றாகலை மாவட்ட சிங்கள மக்களை வரவழைத்து அத்துமீறிய சிங்கள குடிப்பரம்பலை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையும் எதிர்காலத்தில் 2030ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே மட்டக்களப்பு சித்தாண்டியில் 50நாட்களையும் தாண்டிய வகையில் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.இந்த போராட்டம் பண்ணையாளர்களின் போராட்டமாக மட்டுமல்லாமல் கிழக்கின் முழு இருப்புக்கான போராட்டமாக மாற்றமடையும் நிலையுருவாகிவருகின்றது.
அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டமும் வடக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குழுவினரின் வருகையும் இந்த போராட்டத்தினை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டுசெல்லும் நிலை காணப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவிலான உரிமைசார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக நில ஆக்கிரமிப்புக்கான போராட்டம் என்பது கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் இருந்துவெளிப்படுவது குறைந்தளவிலேயே காணப்பட்டுவந்த நிலையில் அண்மையில் வீரியம்கொண்ட போராட்டம் ஒன்று நடைபெற்றமையானது ஒட்டுமொத்த வடகிழக்கினையும் ஆட்டம்காணவைத்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான போராட்டமானது பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 05 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பேரணியாக சென்றதானது பாரிய எழுச்சியை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் உணர்வெழுச்சியுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் அத்துமீறிய குடியேற்றவாசிகளுக்கும் எதிராக எழுப்பிய கோசங்கள் என்பதை வெறுமனே யாரும் சாதாரணமாக கடந்துசெல்லமுடியாது. இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏழுச்சியானது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் ஏற்படவேண்டும்.ஒட்டு மொத்த கிழக்கிலும் இந்த ஏழுச்சி ஏற்படவேண்டுமானால் வடகிழக்கு மாகாணம் எங்கும் எழுச்சி ஏற்படவேண்டும்.
மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், “தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சியை முன்னெடுத்துவருகின்றது.அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் மயிலத்தமடு,மாதவனை பகுதிய செயற்பாடாகும்.இது இன்றுநேற்று அல்ல டட்லி சேனநாயக்க காலத்தில் நினைத்த விடயத்தினை ஜேஆர் காலத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்தார்கள்.தற்போது ஜனநாயகம் பேசிக்கொண்டு நிலங்களை பறித்துக்கொண்டு சிங்கள மயப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்வதில் இந்த அரசாங்கம் பாரிய முனைப்பினை காட்டிவருகின்றது
அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்புகளையும் பிரதிநிதித்துவத்தையும் இழந்துவரும் நேரத்தில் திருகோணமலையிலும் அதேநிலைமையினை எதிர்கொண்டுள்ள காலச்சூழலில் தொடர்ந்தும் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம்,வஞ்சிக்கப்படுகின்றோம்.அதற்கு எதிராகவே மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது எங்களது கடமையாகும்.இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஜனாதிபதி அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றகாரர்களை அகற்றுமாறு கூறிய பின்னரும் அப்பகுதியில் புத்தர்சிலையினை வைத்தார்கள்,சட்ட விரோதமாக அம்பிட்டிய தலைமையிலான அராஜககுழு தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது.முன்னாள் ஆளுனர் அனுராதா ஜகம்பத் தலைமையில் நிலப்பறிப்பு செயற்பாடுகள் இந்த விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடைமுறைகள் நடைமுறைப்படுத்தாவிட்டால் நாங்கள் வடகிழக்கில் மாபெரும் மக்கள் அலையினை உருவாக்கி அரசாங்கத்திற்கு ஒரு பதிலை சொல்லவேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை”என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து வெறும் அரசியல் ரீதியான கருத்தாக இல்லாமல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடகிழக்கு ரீதியாக எழுச்சிபெறும்போது கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் பாதுகாக்கப்படும். இன்று மயிலத்தமடு,மாதவனையில் அத்துமீறிய காணி அபகரிப்புகளில் ஈடுபடுவோருக்கு தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் பாரியளவில் உதவிகளை வழங்கிவரும் நிலையில் இவற்றினை தடுத்து நிறுத்தி தமிழர்களின் தாயப்பகுதியை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.