மாவீரர் குடும்பங்கள் வாழ உதவாது மாவீரர் நாளைக் கொண்டாடுவதை எவ்வாறு மாற்றலாம்?

மாவீரர்கள் என்பவர்கள் பயங்கரவாதிகள் என்ற முத்திரை சர்வதேச வல்லரசுகளால் தங்களுடைய சுயநல தேவைகளுக்காக சுமத்தப்பட்டு தடைசெய்தார்கள். பூகோள மற்றும் பொருளாதார நலன் சார்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையை நசுக்கி தமிழர்களின் காவலரண்களாக விளங்கிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து தடைப் பட்டியலிட்டுள்ளார்கள்.

பாலஸ்தீனிய மக்களை பயங்கரவாதிகளாக இன்று யூதர்களும் அவர்களுக்கு ஆதரவுகொடுக்கும் நாடுகளும் அழைத்துக் கொண்டிருப்பது போல் தான் ஈழத்திரு நாட்டினுடைய சொந்தக்காரனாகன ஈழத்தமிழரையும் இவர்கள் பயங்கரவாத முத்தயிரை குத்தியது மட்டுமல்லாமல் சர்வதேசமே இணைந்து எம்மை அரசியல் அனாதைகளாக ஆக்க முயற்சிக்கின்றது.

காலங்காலமாக சிங்களவர்களால் இன அழிப்பிற்கு உள்ளான ஒரு தேசிய இத்தின் விடிவிற்காய் தமது இன்னுயிர்களை ஈய்ந்து போராடிய எம் விடுதலை இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஐநா போன்ற மனித உரிமை மன்றங்கள் தொடர்ந்தும் கபட நாடகம் ஆடிவருகின்றது. சர்வதேச சமூகத்தின் நீலிக்கண்ணீரில் மயங்காது நாம் துணிவுடன் தொடர்ந்து போராடி விடுதலை இயக்கத்தின் தடையை நீக்குவதற்கான வழிவகை செய்யவேண்டும்.

எம்து கண் முன்னே மாவீரரைப் பெற்றவர்களும் உறவினர்களும் தெருக்களில் நின்று போராடி வருகின்றனர். பல போராளிக் குடும்பங்கள் அன்றாட உணவிற்கே அல்லல்படுகின்றனர். அதுபோக அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கும் கீழ்த்தரமான செயல்களும் நடைபெறுகின்றது.

இவற்றிற்கு ஒரு சரியான தீர்வு காணப்படாமல் பல இலட்சங்களைச் செலவுசெய்து நினைவு தினங்களும் சம்பிரதாயங்களும் உலகெலாம் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறுகின்றது. எமது அடுத்த தலைமுறைக்கு எமது போராட்ட வரலாற்றை கடத்த வேண்டுமாயின் இப்படியான சடங்குகள் செய்யத்தான் வேண்டும். அதே நேரத்தில் வலிமையாக போராடியவர்கள் நலிந்துபோன காலத்தில் அவர்களுக்கான நல்வாழ்க்கையையும் அமைத்துக்கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

சபாரட்ணம் சிவயோகநாதன் (மட்டக்களப்பு)