அவுஸ்திரேலியா காட்டுத் தீயால் நியூசிலாந்து வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் எழுந்த புகை நியூசிலாந்து வரை சென்றதால் அந்நாட்டின் பல பகுதிகளில் நேற்று வானம் செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது.

அவுஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காது பற்றியெரியும் காட்டுத் தீயால் அதன் பக்கத்து நாடுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. நியூசிலாந்தில் நேற்று வானம் திடீரென செம்மஞ்சள் நிறமாக மாறியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பலர் அவசரகால அழைப்பு எண்ணைத் தொடர்பு கொண்டு இது குறித்து அறிவித்தனர்.

இந்நிலையில், வானம் செம்மஞ்சள் நிறத்தில் தோன்றுவதற்கு அவுஸ்திரேலிய காட்டுத்தீயே காரணம். எனவே, இது குறித்து முறைப்பாடு செய்ய அவசர எண்ணை மக்கள் அழைக்க வேண்டாம் என்று நியூசிலாந்து பொலிசார் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

வானத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக ஏராளமான அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன எனவும் பொலிசார் கூறியுள்ளனர். இதேவேளை, நாட்டைச் சூழ்ந்துள்ள புகையால் மனிதர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காற்று மாசுப் பிரச்சினை குறைவாக இருந்தாலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், ஆஸ்மா அல்லது மற்ற சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.