அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

591 Views

 பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல்

அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமது காலனீய காலத்துக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சு அரசின் கொள்கையில் இது மிக அண்மைக்கால முயற்சியாகும்.

அலி பூமென்ஜெல்லின் (Ali Boumendjel) நான்கு பேரப்பிள்ளைகளைச் சந்தித்த மக்ரோன், குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு 1957ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி அல்ஜியர்ஸ் (Algiers) நகரத்தில் கொல்லப்பட்டார் என்பதை ‘பிரெஞ்சு நாட்டின் பெயரில்’அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

WhatsApp Image 2021 03 06 at 3.12.11 PM 1 அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்ட பொழுது தற்கொலை செய்துகொண்டார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். இத் தகவல் பொய்யானது என வாதிட்டு வந்த அவரது மனைவியும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று பல வருடங்களாகப் பரப்புரை செய்து வந்திருக்கிறார்கள்.

“எமது வரலாற்றை நேருக்கு நேராகப் பார்த்து உண்மையை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்னும் ஆற்றப்படாமல் இருக்கின்ற காயங்களைக் குணமாக்கப் போவதில்லை என்ற பொழுதும் எதிர்காலத்துக்கு அது ஒரு புதிய பாதையைத் திறந்துவிடும்” என்று மக்ரோனின் பணிமனையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.

காலனீய காலத்துக்குப் பின்னர் பிறந்த முதலாவது அதிபர் என்ற வகையில் 1962ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற வட ஆபிரிக்க காலனீய நாடான அல்ஜீரியாவின் போராட்டங்களைக் அடக்குவதற்கு பிரான்சு மேற்கொண்ட மிக மோசமான நடவடிக்கைகளை வெளிப்படையான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படாத பல முயற்சிகளை மக்ரோன் எடுத்து வருகிறார்.

பிரெஞ்சு அரசினால் அல்ஜீரியப் போர் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதிகளில் சித்திரவதைகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு ‘கட்டமைப்பை’ பிரெஞ்சு அரசு அங்கு உருவாக்கியிருந்தது என்றும் கணிதவியலாளரும் சுதந்திரத்துக்கு ஆதரவான கம்யூனிச செயற்பாட்டாளருமான மொரிஸ் ஓடான் என்பவரும் (Maurice Audin) அல்ஜியர்சில் கொல்லப்பட்டதாகவும் மக்ரோன் 2018ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

WhatsApp Image 2021 03 06 at 3.13.21 PM 1 அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

காலனீய காலத்தில் பிரெஞ்சு அரசு அல்ஜீரியாவில் எப்படி நடந்து கொண்டது என்பதை ஆய்வு செய்வதற்காக வரலாற்று ஆய்வாளரான பெஞ்சமின் ஸ்ரோறாவை (Benjamin Stora) கடந்த ஆண்டு ஜூலையில் மக்ரோன் நியமித்திருந்தார். பூமென்ஜெல்லின் கொலையை ஏற்றுக்கொள்வது போர்க்காலத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த மக்களின் கதைகளைக் கேட்டபதற்காக நினைவுக்கும் உண்மைக்குமுரிய ஆணைக்குழுவைத் (memory and truth commission) தாபித்தல் போன்ற பரிந்துரைகளை ஸ்ரோறாவின் அறிக்கை ஜனவரி மாதத்தில் முன்வைத்திருந்தது.

இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக முறையாக மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த கால செயற்பாடுகளுக்காக ‘வருந்துதலோ, அவற்றுக்காக மன்னிப்புக் கேட்பதோ முன்னெடுக்கப்படமாட்டாது. அதற்கு மாறாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அடையாள ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று மக்ரோன் தெரிவித்தார்.

உண்மைகளை வெளிப்படுத்துதல்

பூமென்ஜெல், பிரெஞ்சு மொழி பேசுகின்ற தேசியத்தை ஆதரிக்கின்ற ஒரு சட்டத்தரணியும் அதே வேளையில் ஒர் அறிவுஜீவியுமாகும். மிதவாதக் கொள்கையைக் கொண்ட UDMA கட்சிக்கும் திரைமறைவு எதிர்ப்பு இயக்கமான தேசிய விடுதலை முன்னணிக்கும் (National Liberation Front – FLN) இடையே இணைபாலமாக பூமென்ஜெல் திகழ்ந்தார்.

பூமென்ஜெல்லின் மனிதாயத்தையும் துணிவையும் தனது செய்தியில் புகழ்ந்த மக்ரோன் “காலனீய கட்டமைப்பின் அநீதிகளுக்கு எதிரான தனது போராட்டத்தில் பிரெஞ்சு அறிவொளிக்கால விழுமியங்களை அவர் உள்வாங்கியிருந்தார்” என்று மேலும் தெரிவித்தார்.

அல்ஜியர்சில் பிரெஞ்சுப் புலனாய்வுக் கட்டமைப்பின் முன்னைய தலைவராக இருந்த போல் ஒசாரெஸ் (Paul Aussaresses) “1955-1957 காலத்து விசேட சேவைகள்” என்ற ஒரு நூலை 2001இல் வெளியிட்டிருந்தார். தாமும் தமது மரணக் குழுவும் பூமென்ஜெல் உட்பட்ட சிறைக்கைதிகளை எப்படிச் சித்திரவதை செய்து கொன்றோம் என்பதை அந்நூலில் அவர் விபரித்திருக்கிறார்.

அரசு குறிப்பாக அப்போது நீதி அமைச்சராக இருந்து பின்னர் நாட்டின் அதிபரான பிரான்சுவா மிற்றரோனுக்கு (Francois Mitterrand) சித்திரவதை, கொலை, கட்டாய இடப்பெயர்வுகள் போன்ற செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன என்றும் அவர் அவற்றைச் சகித்துக்கொண்டார் என்றும் ஒசாரெஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது மாமனார் தொடர்பாக பிரெஞ்சு அரசு சொல்லி வந்த விடயங்களை மிக மோசமான பொய் என்று பூமென்ஜெல்லின் மருமகளான படேலா பூமென்ஜெல்-ஷிற்றூர் (Fadela Boumendjel-Chitour) கடந்த மாதம் சாடியிருந்தார்.

இதற்கு முதல் இதனைச் சீர்செய்ய பிரெஞ்சு அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. தான் தொடர்ந்தும் தேசிய ஆவணக் காப்பகத்தைத் திறப்பேன் என்று கூறியதோடு அனைத்துத் தரப்புகளாலும் அட்டூழியங்கள் இழைக்கப்பட்ட அல்ஜீரியப் போரை இடைவிடாது தொடர்ந்து ஆய்வுசெய்யும் படியும் வரலாற்று ஆய்வாளர்களை மக்ரோன் கேட்டுக்கொண்டார்.

WhatsApp Image 2021 03 06 at 3.13.53 PM 1 அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

ஆழமான காயங்கள்

நூறு வருடங்களுக்கு மேலாகப் பாரிசு அல்ஜீரியாவை ஆட்சி செய்ததுடன் 1954 இலிருந்து 1962 வரை அங்கு நடைபெற்ற சுதந்திரப் போரில் 1.5 மில்லியன் அல்ஜீரிய மக்கள் கொல்லப்பட்டதுடன் அது அல்ஜீரிய மக்கள் நடுவில் ஆழமான காயங்களையும் காலனீய காலத்தின் விளைவுகள் தொடர்பான மோசமான ஒரு விவாதத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

அல்ஜீரிய ஆக்கிரமிப்பு “மனிதகுலத்துக்கு எதிரான ஒரு குற்றம்” என்றும் “அங்கு பிரெஞ்சு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் காட்டுமிராண்டித்தன்மை வாய்ந்தவை” என்றும் 2017ம் ஆண்டில் தான் முன்னெடுத்த தேர்தல் பரப்புரையில் மக்ரோன் குறிப்பிட்டிருந்தார்.

அல்ஜீரியாவில் காலனீய காலத்தில் பிரெஞ்சு அரசு மேற்கொண்ட அட்டூழியங்களை ஏற்றுக்கொண்டு அந்த நாடு தொடர்பாக பலவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மக்ரோன் எடுத்து வருகின்ற போதிலும் பிரெஞ்சு அரசு மன்னிப்புக் கோரவேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து வருவதற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார்.

அதே வேளையில் பக்கச் சார்புடையது என்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றும் ஸ்ரோறா மிக அண்மையில் வெளியிட்ட அறிக்கையை அல்ஜீரிய அரசு சாடியிருக்கிறது.

WhatsApp Image 2021 03 06 at 3.12.53 PM 1 அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

பிரெஞ்சு அரசில் வலதுசாரிகளாகவும் தீவிர வலதுசாரிகளாகவும் திகழ்கின்ற அரசியல்வாதிகள் கடந்தகால வரலாற்றைக் கிளறுவதற்கு தமது எதிர்ப்பைப் பதிவுசெய்கின்ற அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை நாகரீகமடையச் செய்வதற்கு பிரெஞ்சுக் காலனீயம் பயன்படுத்தப்பட்டது என்று கூறி இன்றும் காலனீயச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வருகின்றனர்.

வரலாற்றின் மீதுள்ள வெறுப்பு என்றும்  எப்போதுமே முடிவுறாத கடந்த காலச் செயல்களுக்காக வருத்தப்படும் செயற்பாடு என்றும் கூறி அதிபர் தேர்தலுக்காக 2017ம் ஆண்டில் மக்ரோன் மேற்கொண்ட பரப்புரையில் அல்ஜீரியா தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளை அத்தேர்தலில் தோல்வியடைந்த அவரது வலதுசாரி எதிரியான பிரான்சுவா பியோன் (Francois Fillon) மறுத்துரைத்திருந்தார்.

நன்றி: அல்ஜசீரா

Leave a Reply