இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தல்

540 Views

இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைத் தடைகளை விதிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற தமிழினப்படுகொலை குறித்து பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று, முள்ளிவாய்க்கல் நினைவு நாளில், இலங்கை மோதலின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் நினைவில் கூருகிறோம்.

தொழிலாளர் கட்சி தமிழ் சமூகத்துடன் நிற்கிறது, இந்த நாளில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம். ஆனால் நாம் இழந்தவர்களை நினைவுகூரும் போது உண்மையை வெளிகொண்டுவருவது மட்டுமின்றி நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாக இருக்க வேண்டும். முள்ளிவாய்க்காளில் அட்டூழியங்களைச் செய்தவர்கள் 12 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதிக்கு முன் கொண்டு வரப்படவில்லை.

இன்று, தொழிலாளர் கட்சி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானர்வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. பலனளிக்கக்கூடிய பொறுப்புக்கூறல் கட்டமைப்பை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் பொமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவார்கள் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply