அம்மையார் சந்திரிக்காவிடம் சில கேள்விகள் – நேரு குணரட்னம்

அம்மையாரே மீண்டும் ஒரு சனாதிபதித் தேர்தலில் மேலும் ஒருவரை ஆதரித்து யாழ் சென்றீர்களாம்! நீங்கள் ஆதரிப்பவரை ஏன் நல்லவர் வல்லவர் என்று சொல்லி தமிழ் மக்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்வார் எனச் சொல்லி வாக்குக் கேட்பது உங்கள் உரிமை. அதை யாரும் மறுதலிக்க முடியாது. நானும் அதைப்பற்றிக் கேட்கவில்லை. அதை ஏற்பதுவம் விடுவதுவும் மக்கள் உரிமை. ஆனால் உங்கள் ஆட்சிக்காலத்தில் நீங்கள் சமாதானத்திற்கு மட்டும் முயன்றது போலவும், அதற்காக 42 கடிதங்களை புலிகளுக்கு அனுப்பியதாகவும் அவற்றை எல்லாம் வெளியிடத் தயாராக இருப்பதாகவும், அதைத் தவிர தமிழ்த் தலைமையை சேர் என வேறு கூறினீர்களாம். முதலில் முடிந்தால் இதே வார்த்தையை உங்கள் பகுதியிலும் போய் அப்படியே சொல்லுங்கள். உங்களுக்கு நாம் தலை வணங்குகிறோம். முடியாதானால் இது தமிழ் மக்களை ஏமாற்றும் வெறும் சித்து விளையாட்டு என்பதையாவது ஏற்றுக் கொள்கின்றீர்களா? அம்மையாரே!

அம்மையாரே 1994 பிற்பகுதியில் தாங்கள் பதவியேற்றீர்கள்.. ஞாபகம் இருக்கிறதா? பதவியேற்றுற ஒரு வருடத்திற்குள்ளேயே… ஆம் எம் மக்களுக்கு இன்றும் நினைவிருக்கிறது.. என்றும் நினைவிருக்கும்… ஒக்டோபர் 30 நாள் 1995 ஆம் ஆண்டு, இரவோடு இரவாக யாழ் குடா மக்கள் முற்றாக இடம்பெயர்க்கப்பட்டார்களே! அலறியடித்துக் கொண்டு தம் உயிரைக் காக்க காரிருளில் ஓடினார்களே! அதுவா உங்கள் சமாதான முயற்சி அம்மையாரே?

ராஜபக்சாக்கள் மீதும் அவர் சார்ந்தோர் மீதும் தமிழ் மக்களுக்கு ஆறாத வலியிருக்கிறது! அதற்காக நீஙகள் புனிதர் என்றாகிவிடுமா அம்மையாரே? இன்றைய நாள்வரை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்பதை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்ட ஒரு சிங்களத் தலைமையையாவது தாங்கள் உட்பட தங்களால் அடையாளம் காட்டமுடியுமா? அல்லது அதற்கு பரிகாரமாக காத்திரமான முன்னெடுப்புகளை செய்த ஒரு தலைமையாவது அடையாளம் காட்டமுடியுமா? இன்றைய நாளுக்கே வருகிறேன்.. 2014இல் அமெரிக்கா உங்களை அழைத்து சனாதிபதித் தேர்தலில் நிற்கக் கேட்க, அதற்கு மறுத்து மாற்றாக பொறுப்பேற்று நீங்கள் அழைத்து வந்தவர் தானே மைத்திரி ஜயா! அவரை ஆதரிக்குமாறு கோரி அப்போதும் யாழ் பிரச்சார மேடைகளில் நீங்கள் வலம் வந்தீர்கள்.. என்ன சொன்னீர்கள் என்பதுவம் நினைவிருக்கும் என்று நம்புகிறோம்..

இருக்க கூட்டமைப்பிடம் தன் கையால் எழுதி என்ன என்ன விடயங்களை பதவியேற்று 100 நாட்களிற்குள் செய்து முடிப்பேன் என்று வேறு உங்கள் மைத்திரி கையளித்தாரே அம்மையாரே! தற்போது 18 நூறுநாட்கள் கழிந்துள்ளனவே அவற்றில் ஏதாவது ஒன்றையாவது முழுமையாக உங்கள் மைத்திரி அமுல் நடத்தப்படவில்லையே? அவரிடம் கேட்பதற்கு முன்னர் அம்மையாரே சாட்சியாக பொறுப்பேற்று வந்த நீங்கள் இந்த ஜந்து வருடத்தில் தமிழர் விவாகரத்தில் எங்கே போனீர்கள்.? என்ன செய்தீர்கள்? ஜயோ! மறந்துவிட்டதே! தாங்களும் அல்லவா மைத்திரியுடன் மல்லுக்கட்டுகின்றீர்கள்! ஆக அம்மையாரே நீஙக்ள அழைத்து வருபவர்களிடமே உங்களைக் காக்க பின்னர் போராட்டம் நடத்தும் நிலை உங்களுக்கே! பின்னர் மீண்டும் மீண்டும் ஏன் யாருக்கோ காவடியேந்தி தமிழ் மக்களை ஏமாற்ற வருகின்றீர்கள்? ஏன் உங்களுடன் மேடையேறுபவர்களைப் போல நாங்கள் என்றும் நிரந்தர ஏமாளிகள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?

chandrika jaffan அம்மையார் சந்திரிக்காவிடம் சில கேள்விகள் - நேரு குணரட்னம்இன முரணுக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு, சனாதிபதி முறைமை ஒழிப்பு என்றெல்லாம் கடந்த தேர்தலில் பேசினீர்களே? உறுதிமொழி வழங்கினீர்களே! தற்போது ஏன் மீண்டும் ஒரு சனாதிபதி வேட்பாளருக்காக பிச்சை கேட்டு வந்துள்ளீர்கள்? தற்போது இந்த சனாதிபதி முறைமையே ஒழிக்கப்பட்டலவா இருக்கவேண்டும்? ஏன் சனாதிபதி முறைமை ஒழிப்பைப் பற்றி இம்முறை வாயையே திறக்கின்றீர்கள் இல்லை? கடந்தமுறை வாக்குறுதிகளில் உங்களால் இலகுவாக முடிந்த இதனையே செய்யவில்லை.. பின்னர் எப்படி இம்முறையும் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றீர்கள்?

அம்மையாரே! 42 கடிதங்கள் விடயத்திற்கே வருகிறேன்.. என்ன அம்மையாரே எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? உங்கள் கடிதங்கள் அனைத்தும் பொதுப்பரப்பில் வெளியிடப்பட்டு வருடங்கள் பல ஓடிவிட்டன என்பது தங்களுக்குத் தெரியாதா? புலிகள் இன்று இல்லைத் தானே! ஆகவே உங்கள் அர்த்தத்தில் புதிதாக வெளியிடலாம் என்ற நினைப்பா? உங்களுடன் அருகில் மேடைகளில் இருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் அறியாமல் இருக்கலாம்! இல்லை உங்கள் கருத்துக்களில் உள்ள தவறை சுட்டிக்காட்டத் அவர்களுக்குத் திறானியற்று இருக்கலாம்.. ஆனால் தமிழர்கள் அனைவரையும் அப்படி நினைத்துவிடாதீர்கள் அம்மையாரே! த பொலிற்றிக்ஸ் ஒப் டிப்பிலிசிற்றியைப் படித்துப் பாருங்கள்..

இருக்க உங்கள் கடிதங்களில் இருந்தே வருகிறேன்.. 1999 இல் பாலசிங்கம் அவர்கள் சிறுநீரகம் செயலிழந்து உயிராபத்தில் இருந்தார். அவரை வன்னியில் இருந்து வைத்திய சிகிச்சைக்காக வெளியேற்ற சர்வதேச உதவி நாடப்பட்டு அவர்களும் உங்களுடன் பேசியபோது முதலில் நம்பமுடியாது என்றீர்கள். பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதனை உறுதிப்படுத்தியது. அதன் பின்னரும் கூட சில மாதங்கள் பாலசிங்கம் அங்கேயே சாகட்டும் எனத் தானே அமைதி காத்தீர்கள்! நல்லெண்ண அடிப்படையில் தம்மிடம் கைதிகளாக இருந்த உயர் கடற்படை அதிகாரிகள் உட்பட 11 உங்கள் படையினரைப் புலிகள் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை வேறு செய்தனரே. அப்போதும் பாலசிங்கம் அவர்கள் வெளியேற்றத்தை நீங்கள் அனுமதிக்கவில்லையே.

பின்னர் சர்வதேச தரப்பில் வலுயுறுத்த கதிர்காமருடன் சேர்ந்து எவருமே ஏற்கமுடியாத 5 நிபந்தனைகளை வேண்டுமென்றே வழங்கியது நினைவிருக்கிறதா? அம்மையாரே.. அந்தக் கடிதத்தையும் நீங்கள் வெளியிடுகின்றீர்களா? இல்லை நாம் வெளியிடவா? இதுதான் உங்கள் மனிதாபிமானமா? இது தான் உங்கள் சமாதான முன்னெடுப்பா? இதன் பின்னர் தான் மிகவும் ஆபத்து நிறைந்த கடல்வழிப்பாதையூடாக பாலசிங்கம் அவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த சர்வதேச நாட்டில் சிறுநீரக இணைப்பு சத்திர சிகிச்சைக்கும் உள்ளாக்கப்பட்டார். அது சரி சமாதான பேச்சுவாத்தைக் காலத்திலும் தாங்கள் தானே சனாதிபதி! ஏன் பாதுகாப்பு உட்பட மூன்று அமைச்சுக்களைப் ரணில் ஜயாவிடம் இருந்து பறித்து உங்களகப்படுத்தி கலகம் விழைவித்தீர்கள்? அதுவும் உங்கள் சமாதான முன்னெடுப்பா? ஜயோ மறந்துவிட்டதே இன்று நீங்கள் இருவரும் ஒன்றுக்குளை ஒன்டல்லே! நாம் தான் எப்பவும் கோவனமுமின்றி அம்மணம்..

அதுசரி அம்மையாரே! சுனாமி.. சுனாமி ஞாபகம் இருக்கிறதா? தமிழர் வாழ்வை இல்லை மனித வாழ்வைப் புரட்டிப் போட்ட அந்தப் மனிதப்பேரவலம் நடந்தபோது நிவாரணியாக உங்கள் சிங்கள மக்களும் கொடுத்த நிவாரணங்களுடன் பல நாட்கள் லொறிகள் ஓமந்தையில் காத்துக் கிடந்தனவே! ஏன் நீங்கள் தடுத்தீர்கள் அனுமதிக்கவில்லை… அதுதான் புலிகளை வதைக்க நல்ல நேரமென தமிழ் மக்களை வதைத்தெடுத்தீர்களே! மன்னிக்க சேண்டும் அதைப் போல சிறந்த சமாதான முன்னெடுப்பை தாங்கள் தமிழ் மக்கள் சார்ந்து என்றும் முன்னெடுத்ததில்லை போங்கள்…

மகிந்தா கொடியவன், தமிழருக்கு அநியாயம் செய்தவன் என எங்களுக்கு நன்றாகவே தெரியும்… அதைத் தான் நீங்களும் சொல்வதாக இருந்தால் வருகிறீர்களா சர்வதேச அரங்கிலும் அதைச் செய்து முடிப்போம்? வருகினற மார்ச் கூட்டத்தொடரில் ஜெனிவாவில் சந்திப்போமா?

அம்மாயாரே கேட்பதற்கு நிறைய இருக்கிறது… இப்போதைக்கு இது போதும்… ஆகவே அவ்அவ்ப்போது லண்டனில் இருந்து திரும்பி சுற்றுலா வந்து நீங்கள் விரும்புகின்ற அரசியலை நீங்கள் விரும்புகின்ற வகையில் பேசிவிட்டு மீண்டும் ல்;ண்டனில் நீங்கள் செட்டில் ஆக தமிழ் மக்கள் ஒன்றும் வளமற்ற கண்டல்த் தரையல்ல அம்மையாரே.. அதுசரி வடக்குக் கிழக்குத் தமிழர்களை தம் அரசயில் நலன்களுக்காக தென்பகுதி அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதை இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை என வேட்பாளர் ஒருவர் சமீபத்தில் கிழக்கில் முழங்கினாரே! அவரது மேடையிலேயே அதைத் தான் நீங்கள் செய்ய அவர் அனுமதித்துள்ளாரே? அப்படியானால் தற்போதைய வாகுறுதிகளும் நவம்பர் 16ஆம் நாளுடன் காலாவதியாகிவடும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்… அதை வெளிப்படையாகவாவது சொல்லியிருந்தால் அத்துணிவிற்காக உங்களை வாழ்த்தியிருக்கலாம்.. இனிமேல் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும்..