அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் என்னவாகும்?

631 Views

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்தை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

தற்போது ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்துள்ளார். அவரின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விடயம் தொடர்பாக அவர் மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுகள் குத்தகை்கு ஒப்படைக்கும் ஒப்பந்தம் கைச்சத்தானது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்த துறைமுகத்தை போர்க் கப்பல்களின் தளமாக சீனா பயன்படுத்த நேரிட்டால், அது இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா கருதி அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும்படி கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு சீனா மறுப்புத் தெரிவித்தது.

நாட்டின் பொருளாதர மேம்பாட்டிற்காகவே துறைமுகம் குத்தகைக்கு வழங்கப்பட்டதாகவும், அதில் இராணுவத் தளம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அப்போதைய இலங்கை அரசு தெரிவித்தது.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள கோத்தபயா ராஜபக்ஸ அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று(29) தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம், சீனாவுடன் நட்புறவைப் பேணி வந்த நிலையில், கோத்தபயா ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை இரத்துச் செய்வதன் மூலம் இந்தியாவுடன் நல்லுறவை பேணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காகவே கோத்தபயா ராஜபக்ஸ 3நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றுள்ளார். இந்தியாவில் அவர் இருக்கும் போது, இந்த தகவல் வெளியிடப்பட்டதானது, இந்தியாவிற்கு இலங்கை அரசு மீது ஒரு நல்லெண்ணத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்வது தொடர்பாக சீனா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இலங்கைக்கான சீன தூதரகத்தின் பேச்சாளர் லுவோசொங் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலில், அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்குச் சொந்தமானது. அது இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. எனவே அந்த துறைமுகம் தொடர்பான எந்த முடிவையும் இலங்கையே எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் கப்பல்களை அனுமதிப்பது உட்பட எந்த தீர்மானத்தையும் இலங்கையே மேற்கொள்ள வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள் அனைத்தும் இருதரப்பினதும் நன்மையை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது என தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply