அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முகநுால் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளது முகநுால் நிறுவனம்.
கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் இட்ட பதிவுகளுக்காக முகநுால் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்ரம்பின் கணக்கை முற்றிலும் முடக்கியது. ஆனால், இந்த முடிவு, முகநுால் மேற்பார்வை ஆணையத்தால் கடந்த மாதம் விமர்சனத்திற்கு உள்ளானது.
“ட்ரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்” என்று முகநுால் நிறுவனம் குறிப்பிட்டது. கடந்தாண்டு அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களை இது “அவமானப்படுத்தும் செயல்” என்று ட்ரம்ப் இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார்.
முகநுாலின் புதிய விதிமுறை படி வன்முறை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவது போல பதிவிடும் முக்கிய நபர்களின் கணக்குகள் ஒரு மாதம் அல்லது தீவிர வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் வரை இடை நிறுத்தம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.