அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்புமா- நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

350 Views

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிறகு, அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் டிரம்ப் மூன்றாவது நபராக விளங்குகிறார்.

இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறினாலும், செனட் சபையிலும் நிறைவேறினால்தான் அவரது பதவி பறிபோகும்.

புதன்கிழமை அன்று ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுக் கட்சி தலைவருக்கு எதிராக உள்ள இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தின் இன்னொரு அவையான செனட் சபையில் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார். ஆனால் அந்த சபை அதிபரின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவருக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானம் வெற்றிபெறாது என நம்பப்படுகிறது.

மேலும் டிரம்ப் இந்த நடைமுறையை “திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சதி” என்றும் “பழிவாங்கல்” என்றும் குறிப்பிடுகிறார்.

”குற்றச்சாட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டதிலிருந்து” தமது உரிமைகள் மறுக்கப்பட்டதாக வாக்கெடுப்பு நடைபெற்ற நாளன்று அவர் வெளியிட்ட ஆறு பக்க கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பு முக்கிய சாட்சியம் அளிக்க வேண்டிய உயர் அதிகாரிகளை டிரம்ப் தடுத்தார். மேலும் நாடாளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற அழைப்பையும் ஏற்க மறுத்தார்.

செவ்வாயன்று, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இரு குற்றச்சாட்டுகளுக்குமான பதவிநீக்க வாக்கெடுப்பை அறிவித்தார்.

டிரம்ப் மீதானகுற்றச்சாட்டுகள் என்னென்ன?

கடந்த வாரம் பல மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் நீதி விசாரணைக் குழு டிரம்புக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் நிறைவேற்றியது. முதல் குற்றச்சாட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தது.

அதிபர் டிரம்ப் தனது அரசியல் போட்டியாளரான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை பழிவாங்க யுக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

    • கடந்த ஜூலை மாதம் அதிபர் டிரம்ப் யுக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்த சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு குறித்து பெயர் வெளியிடவிரும்பாத நபர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த பதவி நீக்க விவகாரம் உருவெடுத்தது.

 

அந்த சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பின்போது, உள்நாட்டு அரசியலில் தமக்கு உதவும் வகையில் முன்னாள் துணை அதிபரும், அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் வாய்ப்புள்ளவருமான ஜோ பிடன் மகனுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்தால் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி தருவதாக யுக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலன்ஸ்கியிடம் வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது அவரது மகன் உக்ரைன் மின்சார நிறுவனம் ஒன்றின் இயக்குநர் குழுவில் இணைந்தார்.

இரண்டாவது குற்றச்சாட்டு அமெரிக்க அரசு தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு டிரம்ப் ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்ற படுவது எப்படி ?

அமெரிக்க அரசியலமைப்பின் படி, “குற்றச்சாட்டு, தேச துரோகம், ஊழல், அல்லது பிற பெரிய குற்றங்களில் ஈடுபட்டால்” அதிபராக இருப்பவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இது சட்ட ரீதியான நடைமுறையல்ல. அரசியல் நடைமுறை.

அதிபர் பதவி நீக்கத்திற்கான முதல்படி, பிரதிநிதிகள் சபையில் மேற்கொள்ளப்படும். தற்போது ஜனநாயக கட்சியினர் கட்டுப்பாட்டில் இந்த சபை உள்ளது. குற்றச்சாட்டுக்கு அங்குள்ள உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர், முதல் கட்டமாக இந்த சபையில் குற்றம் நிறைவேற்றப்பட பெரும்பான்மை வாக்குகள் மட்டுமே தேவை.

மூன்றில் இரண்டு பங்கு செனட் சபை உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக வாக்களித்தால், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

ஏற்கனவே இரண்டு அமெரிக்க அதிபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1868ம் ஆண்டு ஆண்ட்ரு ஜான்சன் மற்றும் 1998 ம் ஆண்டு பில் கிளிண்டனுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதவிநீக்க நடவடிக்கைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் செனட் சபை அவர்களுக்கு எதிராக வாக்களித்ததால் பதவி நீக்கம் செய்யவேண்டிய சூழலுக்கு தள்ளப்படவில்லை.

1974ம் ஆண்டு ரிச்சர்ட் நிக்சன் அதிபர் பதவியில் இருந்து விலகினார். வாட்டர் கேட் மோசடிக்கு எதிராக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிறைவேற்றப்படும் என்பதை அறிந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தால் தான் பதவியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு இருந்ததால், ரிச்சர்ட் நிக்சன் தாமாகவே முன்வந்து அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

நன்றி – பிபிசி தமிழ்

Leave a Reply