அமெரிக்கா ஏவுகணை சோதனை

ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தை செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி 500 கிமீ. முதல் 5,500 கிமீ தூரம் செல்லும் அணு  ஏவுகணைகளின் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி புதிய ரக ஏவுகணையை தயாரித்ததாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இந்த மோதலின் காரணமாக, அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தை இருநாடுகளும் சமீபத்தில் முறித்துக் கொண்டன.

இதைத்  தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிறன்று புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் கடற்கரையில் அமெரிக்க கடற்படை  கட்டுப்பாட்டில் உள்ள சான் நிகோலஸ் தீவில் இருந்து நடுத்தர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது விண்ணில் 500 கிமீ சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கியது,’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்து ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி ரியாபாக்வ் கூறுகையில், “நடுத்தர ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்து இருப்பது கவலை அளிக்கிறது. இரு நாடுகளுக்கு  இடையே ராணுவ ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா இதை செய்துள்ளது. ஆனால், இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயல்களுக்கு நாங்கள் பதில் தர மாட்டோம்,” என்றார்.