“அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

May be an image of 1 person and book

“அன்புள்ள ஆரியசிங்க”  நுால் குறித்து  அருட்தந்தை செ. அன்புராசா அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

அருட்தந்தை செபமாலை அன்புராசா, அமலமரித்தியாகிகள் துறவறசபை சார்ந்த ஒரு கத்தோலிக்க குரு. எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர். “அன்புள்ள ஆரியசிங்க” (தமிழ்), “Dear Ariyasinha” (ஆங்கிலம்), ‘හිතවත් ආරියසිංහ වෙත’(சிங்களம்) ஆகிய மூன்று நூல்கள் 27.02.2023 அன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலையகத்தில் வெளியிடப்பட்டன.

எமது இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு சிங்களச் சகோதரனோடு உரையாடுவது போல  இந்த  நூலை எழுதியுள்ளார்.  அவரது இந்த எழுத்து அனுபவம் தொடர்பாக இலக்கு, அடிகளாருடன் ஒரு செவ்வியை மேற்கொண்டது. எமது வாசகர்களுக்காக அந்தச் செவ்வியை இங்கே தருகிறோம்.

WhatsApp Image 2023 03 17 at 7.56.47 PM 2 1 “அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

கேள்வி -எங்களது வாசகர்களுக்கு தங்களை அறிமுக படுத்திக் கொள்ளுங்களேன்?

பதில்-
என்னுடைய பெயர் செ.அன்புராசா. நான்  மன்னார்  மாவட்டத்தைச் சேர்ந்தவன். என்னுடைய குருத்துவப் பணியின் நிமித்தம், பல இடங்களிலும் நான் பணி செய்து வந்திருக்கிறேன்.

குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிலும் இன்னும், வெளிநாட்டில் பிரான்சிலும் நான்கு வருடங்கள் பணி செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய குருத்துவ பணியின் 25வது ஆண்டு இவ்வாண்டு. இப்பணிக் காலத்தில் வைத்திய சாலைகளில் ஆன்ம குருவாகவும் அதன் பின்னர் மறையுரைஞராகவும் அதனைத் தொடர்ந்து பிரான்சில் லூர்து திருத்தலத்தில் ஆன்ம குருவாகவும் அங்கு வரும் யாத்திரியர்களின் ஆன்மீக வழிகாட்டியாகவும், பின்னர் எங்களுடைய சிறிய குருமடத்தில் உருவாக்குனராகவும், தொடர்ந்து மாங்குளத்தில் அமைந்திருக்கும் அவயகங்களை இழந்தவர்களுக்கு செயற்கையாக அவையகங்களை பொருத்தும் ‘அமைதிக்கரங்கள்’ நிலையத்தின் இயக்குநராகவும், அதன்பின்னர் முல்லைத்தீவின் ஒட்டிசுட்டானில் மலரும் முல்லை கல்விவள நிலையத்தில் பணியாற்றினேன்.

இப்போது கிளிநொச்சியில் அன்னை இல்லத்தின் கல்விவள நிலையத்தில் பணியாற்றுகின்றேன். இவற்றை விட நான் எழுத்து துறையில் ஈடுபட்டு வருகிறேன். நான் எழுத்துத்துறைக்கு வந்ததுகூட திடீர்வரவு என்றுதான் சொல்லவேண்டும். நான் எழுதுவதற்கு நினைத்ததில்லை. ஆனால் குருவாக வந்ததன் பிறகு எனது பணிகளின் நிமித்தமாக ஒவ்வொரு இடங்களிலும் இருந்தபோது எழுத வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டன.

குறிப்பாக 1998 முதல் 2002 வரை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மிகவும் பயங்கரமான ஒரு சூழலில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது நான்கைந்து பத்திரிகைகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்றன. அப்போது ஒரு பத்திரிகைகூட வெளிவரவில்லை. மிகவும் கஸ்ரமான சூழலில் உதயன் பத்திரிகை மட்டும் மிகுந்த கெடுபிடிக்குள் வந்துகொண்டிருந்தது.

அந்நாள்களில் அந்த பத்திரிகையில்தான் மக்களது பிரச்சினைகள் ஓரளவு வெளிவந்தன. ஒருமுறை அந்தப் பத்திரிகை இயங்கமுடியாத அளவிற்கு வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு இருந்தன. பிறகு கொஞ்ச நாளில் உயிப்புப் பெற்று திரும்ப வந்தது. அந்தப் பத்திரிகையில், வைத்தியசாலை ஆன்மகுரு என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை எழுதிவந்தேன். அதனூடாக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளைப் பலரும் அறியக்கூடியதாக இருந்தது. பின்னர் வெவ்வேறு பத்திரிகைகளில் சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தேன். அப்படி மாதம் ஒருமுறை வெளிவந்த மன்னா என்ற பத்திரிகையில் தொடர்ந்து 82 சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவந்தேன்.

நான் எழுதிய அக்கட்டுரைகள் அதிர்வுகள் என்ற பெயரில் 03 நூல்களாக வெளிவந்துள்ளன. எழுதவேண்டிய ஒரு தேவை இருந்தபடியாலும், எழுதுவது எனக்கும் ஓர் ஆற்றுப் படுத்துதலாக இருந்த – இருக்கின்ற படியால் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறேன். அப்படிச் சிலபல நூல்களை வெளியிட்டு இருக்கிறேன். சூழ்நிலைகள் என்னை எழுத்துத் துறைக்கு இழுத்து வந்தது என்றுதான் நான் சொல்வேன்.

கேள்வி: சமீபத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள நூல் பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

WhatsApp Image 2023 03 17 at 7.56.47 PM 9 1 “அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

‘அன்புள்ள ஆரியசிங்க’ என்ற ஒரு நூலை எழுதி இருக்கிறேன். இந்நூல் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. சிங்களத்தில் வந்தது தமிழில் வந்த நூலினுடைய முழுமையான மொழிபெயர்ப்பாக உள்ளது. பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ‘அறகலய’ – போராட்டம் ஆரம்பமானது. இப்போராட்டத்தை
கூடுதலாக சிங்கள இளைஞர்கள் முன்னெடுத்தார்கள். தமிழர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது. அப்போது அதைப்பற்றி பல கருத்துக்களைப் பலர் முகநூலிலும் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருந்தார்கள்.

போராட்டத்தினுடைய சில  நாட்களுக்குப் பிறகு நானும் அந்தப் போராட்டம் குறித்து என்னுடைய எண்ணத்தை ஒரு கடிதமாக எழுத நான் யோசித்தேன். அப்போது அதனை ஒரு மடலாகத்தான்  யோசித்து எழுதினேன். அதற்கு முகநூல் நண்பர்கள், வாசகர்கள் என நிறையப்பேர் பின்னூட்டம் தந்திருந்தார்கள். அதை எழுதிய பிறகு எனக்குள் இவ்வளவு காலமாக இருந்த போர்க்கால அனுபவங்களை எழுத எண்ணினேன்.

 பல போர்க்கால அனுபவங்கள் எல்லாம் எனது மனதிற்குள் அப்படியே உறைந்து கிடந்தன. ஆனால் இவற்றை எழுதுவதற்கு உரிய சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. ஆனால் எப்போதாவது எப்படியாவது எழுத வேண்டும் என்று இருந்தேன். அப்போதுதான் இக்கடிதங்களையே தொடர்ந்தால் என்ன என்ற யோசனை வந்தது.

அதன்பின் தொடர்ந்து என் போர்கால அனுபவங்களை வைத்துக்கொண்டு இவ்வனுபவங்களைப் பற்றித் அறிந்திராத பெரும்பான்மையின நண்பனுக்கு எழுதுவது போல 2022ல் காலிமுகத் திடலில் சிங்கள இளைஞர்கள் மிகப்பெரும் போராட்டத்தில் இரவுபகல் என நாள் முழுவதும் நின்றார்கள். 1956ல் நம்முடைய முன்னோர்கள் நின்றார்கள். உண்மையில் அன்புள்ள ஆரியசிங்க என்ற நூலில் உள்ள முதலாவது கடிதத்தை மட்டும் ‘அறகலய’ போராட்டத்திற்கு என்னுடைய பதில் எதுவாக இருக்கும் எனச் சிந்தித்து எழுத எண்ணினேன். பின்னர் இதே வழியில் என் உள்ளத்துள்ளே கிடந்த இவ்வனுபவங்களை எழுதலாம் என விளைந்தேன். மேலும், இக்கடிதம் இவ்வாறு வளர்ந்து ஒரு நூலாகும் என எதிர்பார்க்கவில்லை.

 30 ஆண்டுகால அறவழிப் போராட்டம், அது தோல்வி அடைந்தபோது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் ஆகியவற்றை 30 கடிதங்களில் சொல்கிற மாதிரி ஓர் அடையாள எண்ணப்பட்ட பின்னர் 30 கடிதங்களில் வைத்துக்கொண்டேன். இந்த நூலை நான் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் செய்திருக்கிறேன். ஏனென்றால் நமது மக்களுக்கு வரலாற்றை மறப்பது பழக்கப்பட்ட ஒன்றாக போய்க் கொண்டிருக்கிறது.
எனது வயதை ஒத்தவர்களும், என்னைவிட மூத்தவர்களும், என்னைவிட நிறைய அனுபவம் பெற்றவர்களும்கூட நமது வரலாற்றை மறந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள்.

என்னுடைய இந்நூல் பல்வேறு அனுபவங்களை கொண்டிருக்கிறது. இவை மறக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் தமிழிலும், பகிரப்படவேண்டும் என்பதற்காக சிங்கள மொழியிலும் இவற்றைப் பலரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலும் கொண்டுவந்துள்ளேன். முதலில் தமிழில்தான் எழுதினேன். பின்னர்தான் சிங்களத்தில் மொழிபெயர்த்ததுடன் ஆங்கிலத்திலும் எழுதினேன்.

கேள்வி:
இந்த நூல் இப்போது விற்பனைக்கு வந்து விட்டதா?  இதன் வரவேற்பு தமிழ், சிங்கள மற்றும் புலம்பெயர் தளங்களில் எப்படி இருக்கிறது?

WhatsApp Image 2023 03 17 at 7.56.47 PM 5 1 “அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

ஆம், விற்பனைக்கு வந்துவிட்டது. புலம்பெயர் தளத்திலும் நிறைய வரவேற்பு இருக்கின்றது. வாசிக்கின்ற ஆர்வம் உள்ள நிறையப்பேர் கேட்டிருக்கிறார்கள். பெரிய அளவிற்கு பிரதிகளை நான் இன்னும் வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை. இனிமேல்தான் அனுப்ப வேண்டும்.

 உள்ளூரிலும் இந்த நூலுக்கு நிறைய வரவேற்பு உள்ளது. அதனுடைய வெளியீட்டையும் கொஞ்சம் விசேடமாகத்தான் செய்தேன். என்ன கஷ்டங்களின், இழப்புக்களின் ஊடாக நாங்களும் எங்களுடைய மக்களும் பயணித்தோமோ அது இந்த நூலில் வெளிவந்திருக்கிறது. அதனால், பலரும் பல பின்னூட்டங்களை எனக்கு தருகிறார்கள்.

 இந்த நூலில் நான் எழுதியது கொஞ்சம்தான். இன்னும் எத்தனையோ நிகழ்வுகள், எத்தனையோ அவலங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் நான் சொல்லவில்லை. இதனை ஒரு வரலாற்று நூலாக நான் பார்க்கவில்லை. ஒரு உணர்வுப் பதிவாக – பகிர்வாகத்தான் எழுதினேன். அதற்கு தேவையான சம்பவங்கள் மற்றும் அந்த நேரத்தில் என்னென்ன சம்பவங்கள் நினைவுக்கு வந்தனவோ அவற்றைத்தான் நான் எழுதியிருக்கிறேன்.

 வழமையான என்னுடைய நூல்களைவிட இந்தப் புத்தகம் மிக வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. நான் இப்போது ஏறக்குறைய அச்சகத்தாரோடு இரண்டாவது பதிப்பைப்பற்றிக் கதைத்துக்க் கொண்டிருக்கிறேன். பலரும் இந்நூலை மிக ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். மற்றைய விடயம் ஏதோ ஒரு வகையில் இந்த நூல் அவர்களை ஈர்க்கின்றது. காரணம், அனைத்தும் அனுபவங்களாக இருப்பதாகும்.

கேள்வி:
இப்போது இந்த புத்தகத்தை வெளியிட்ட பிறகு சிங்கள நண்பர்களும் சகோதரர்களும் யாராவது உங்களை தொடர்பு கொண்டு கருத்து எதுவும் சொல்லியிருக்கிறார்களா?

WhatsApp Image 2023 03 17 at 7.56.47 PM 8 1 “அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

நிறைய பேர் புத்தகத்தை வாசித்து இன்னும் முடிக்கவில்லை. நூலை பெறுவது எப்படி என்று கேட்டு எழுதி இருந்தார்கள். அதற்குரிய வழிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றேன். எல்லோருமே வாசித்துவிட்டு எனக்கான பின்னூட்டங்களை தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நானும் “உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கின்றேன். நிச்சயமாக, அவர்களும் பின்னூட்டல்களைத் தருவார்கள். தொடர்ந்து இவற்றைப்பற்றிப் பேசக்கூடியதாக இருக்கும்.

கேள்வி:
இப்போது வேறு எதும்நூல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?

WhatsApp Image 2023 03 17 at 7.56.47 PM 7 1 “அன்புள்ள ஆரியசிங்க”  -அருட்தந்தை செ. அன்புராசா

உடனடியாக ஒன்றும் இல்லை! எனினும், காலம் எனக்குக் கட்டளை இடும்போது அதன் கடமையை நிச்சயமாகச் செய்வேன்.