அன்னையவள் அதிசயம்

அன்னையர் தினத்திற்கான சிறப்புக் கட்டுரை

“பசுந் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம்

இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..

விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா.”

எனும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் என்றென்றும் நம் மனங்களில் ஆழப் பதித்துக் கொள்ள வேண்டியவை. சாதாரண ஒரு மனிதன் 45 டெல் யுனிற் அளவிற்கு தான் வலியை பொறுத்துக் கொள்ள முடியம். ஆனால் ஒரு பெண் பிரசவத்தின் போது 57 யுனிற் அளவிற்கு வலியை அனுபவிக்கின்றாள். இது 20 என்புகள் ஒரே தருணத்தில் உடைவதனால் உண்டாகும் வலிக்கு சமம். அத்துணை வலிகளையும் ஒரு தாயானவள் தன் பிள்ளைக்காக பொறுத்துக் கொள்கின்றாள். தாயில் இருந்து தான் தலைமுறை ஆரம்பிக்கின்றது. சமுதாய மாற்றத்தினையும், தலைமுறை மாற்றத்தினையும் உண்டாக்க கூடிய சக்தி ஒரு தாயிடம் மட்டுமே காணப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

“என்னுடைய தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கின்றது”  – நபிகள் நாயகம்

“எனது நல்ல குணங்கள் அத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த தாயே” – ஆபிரகாம் லிங்கன்

“மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் ” – உலக நியதி

என்று இன்று நாம் பறிக்கும் வெற்றிக் கனிகள் அனைத்திற்கும் பின்னால் எம் தாயின் வியர்வைத் துளிகளும், கண்ணீரும் நிச்சயமாக கலந்திருக்கும். ஒரு குடும்பத்திலே மாதத் தொடக்கத்தில் வேலைக்கு சென்று வருகின்ற ஆணிடம் மனைவி எதிர் பார்ப்பது சட்டைப் பையில் இருக்கும் சம்பளப் பணமாக இருக்கும். அவனது பிள்ளை எதிர்பார்ப்பு என்பது கைப்பையில் இருக்கும் நொறுக்கு தீனியாக இருக்கும். ஆனால் ஒரு தாயானவள்  தன் பிள்ளை இத்தனை நேரம் கழித்து வீட்டிற்கு வருகின்றானே உணவு உண்டானா இல்லையா என அவனது இரைப்பையை பார்ப்பவளாக இருப்பாள்.

இத்துணை சிறப்பு வாய்ந்த அன்னையரை கௌரவிக்கும் வகையில் தான் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையினை அன்னையர் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஆனால் இவ் அன்னையர் தினம் குறித்தும்  அதன் காரணகர்த்தாவை பற்றியும் சற்றேனும் சிந்தித்திருப்போமா?

17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் அன்னையர் தினம் கொண்டாட ஆரம்பித்தார்கள். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தங்கள் தாயை சந்திப்பதற்காக வருடத்தில் மே மாதம் நான்காம் ஞாயிற்று கிழமையில் விடுமுறை வழங்கினார்கள். அது “மதர்ஸ் சண்டே” என அழைக்கப்பட்டது. அதன் போது பரிசுப் பொருட்களுடன் தமது தாயைச் சந்திக்க செல்வார்கள். 1870 களில் வட அமெரிக்காவில் ஜுலியா வார்ட் என்ற பெண் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதன் படி  நூற்றாண்டு காலமாக பல்வேறு வடிவங்களில் அன்னையர் தினமானது மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பினும், அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம் தான் இன்றைக்கு உலகம் எங்கும் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

1908ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் 5000 பேர் அமரக் கூடிய பிலடெல்பியா அரங்கில்  15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஜார்விஸ் என்ற பெண் சேவகியின் மகள் ஜார்விஸ்  அன்னையர் தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து அன்னையர் தின கமிட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அம்மையார் எதிர்பார்த்ததை விட 1909ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அன்னையர் தின விசேட பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். 1913ஆம் ஆண்டு தன் பணி நிமிர்த்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினர்.  தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக 1914ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அதிபர் வூட்றோவில்சன் கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டார். இதன் போது மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படும் என குறிப்பிடப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டே அன்னையர் தினம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்று கிழமை அன்று எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தான் கருத்தரித்ததில் இருந்து தன் விருப்பு வெறுப்பைத் துறந்து தன் பிள்ளையின் நலன் கருதி தான் துன்பப்பட்டு தான் கருவறையில் சுமக்கும் தன் பிள்ளையின் சிறு அசைவினைக் கூட வலியாகப் பார்க்காது இன்முகத்துடன் பூரித்து பார்த்து பத்து மாதங்கள் தன் பிள்ளையின் வரவிற்காய் காத்திருந்து பிரசவ வலி சுமந்து பிள்ளையை பெற்றெடுக்கும் போது அவள் அனுபவிக்கும் வலி, அவளை அறியாமலே கண்களோரம் கசியும் கண்ணீர் என அனைத்தையும் மறந்து, தன் மார்பில் முகம் புதைத்து தன் பிள்ளை பால் அருந்தும் வேளையிலே அவள் இதழ் ஓரம் ஏற்படுகின்ற புன்னகையில் பூக்கின்ற தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம்.

வைகையில ஊர் முழுக

வல்லூறும் சேர்ந்தழுக

கைபிடியாய் கூட்டிவந்து

கரை சேர்த்து விட்டவளே

எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்கு வேறு பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா

ஆம்! ஆயிரம் ஆயிரம் சொந்தங்கள் சுற்றி இருந்தாலும், பணத்தினை வாரி இறைத்தாலும் தாய் அன்பை மட்டும் எங்கும் வாங்கிவிட முடியாது. தொப்பிள் கொடியில் நேசம் ஊற்றி மழலைப் பருவத்தில் மடியில் ஏந்தி பருவ வயதில் பெருமிதம் அடைந்து கடைசி வரையும் கண்ணில் சுமக்க கூடியவளே தாய். நாம் பிறக்கும் வரைக்கும் தன் அழகில் அக்கறை கொண்டவள், தாயாக மாறும் போது உடை வாங்கும் போதும், நகை வாங்கும் போதும் தன் பிள்ளைக்கு அதனை அணிவித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்றே தன் பிள்ளையை பற்றி மட்டுமே சிந்திக்கின்றாள். நாம் இன்று ஒருவருக்கு ஏதேனும் உதவி செய்து விட்டால் அதனை பல முறை அவரிடம் சொல்லிக் காட்டுகின்றோம்; அல்லது ஒரு முறையாவது அதை பற்றி கதைக்காமல் விட்டு விடுவதில்லை. ஆனால் தன் உடல் நிலையை கவனிக்காது கூலி வேலைக்கு செல்வது மட்டுமின்றி பாக்கு விற்று, முட்டை விற்று தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தன் பிள்ளை ஆசைப்படும் பொருட்களை வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கின்றாள். ஆனால் அதை  ஒரு முறை கூட எம்மிடம் சொல்லிக் காட்டியிருக்க மாட்டாள்.

இன்று எத்தனை தாய்மார்கள் அன்னையர் தினத்தில் போற்றப்படுகின்றனர் என்கின்ற கேள்விக்கு அப்பால் எத்தனை தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் கேட்பதற்கு நாதி அற்று இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் எம்மிடமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. மாறி வரும் இந் நவீன யுகத்திலும் எத்தனையோ தாய்மார்கள் தம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் தம் கனவுகளை மனதிற்குள்ளேயே புதைத்து விட்டு வீட்டிலேயே கட்டிப் போடப்படுகின்றனர். அவர்களது வெளி உலகம் என்பது நான்கு சுவர்களுக்குள் முடிவடைந்து விடுகின்றது.

அன்னையர் தினத்தில் அன்னையர்களை பூஜிக்காது போனாலும், அவர்களுக்கு அன்னையர் தினத்திலாயினும் அன்னைக்குரிய மரியாதையை வழங்குங்கள். தாய்மை மதிக்கப்படுகின்ற போது நாட்டில் உள்ள பல முதியோர் இல்லங்கள் அழிக்கப்படும் என்பதனை நாம் அனைவரும் கருத்தில் எடுக்க வேண்டும்.

தாயை போற்றி வீழ்வாரும் இல்லை

தாயை தூற்றி வாழ்வாரும் இல்லை.

வேலம்புராசன். விதுஜா

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்