‘அனைவருக்குமான ஒரு சிறந்த ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்’

இன்று உலக சுகாதார நாள். இரண்டாம் உலக போரின் பிந்தைய உலக ஒழுங்கு மாற்றத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முன்னோடி நடவடிக்கைக்கு வித்திட்டது உலக உலகப்போரின் போது ஏற்பட்ட இழப்புக்களும் மனித அவலங்களும் என்றால் மிகையாகாது.

ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்தின் போதே (1945) உலக சுகாதார
நிறுவனம் ஒன்றின் தேவை முன் வைக்கப்பட்டு 1948ம் ஆண்டு ஏப்ரல்
7ம் திகதி முதலாவது உலக சுகாதார மாநாடு நடத்தப்பட்டு அதன்
யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நாள் வருடம் தோறும் உலக சுகாதார நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் புதிய புறக்கணிக்கப்பட்ட சுகாதாரம் சார்ந்த நெருக்கீடுகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் கருத்துருவாக்க வாசகங்களும்
நடவடிக்கைகளும் ஆரம்பிக்க படுகின்றன.

இதன் மூலம் இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வையும் செயலூக்கத்தையும் அதிகரித்து வருவதில் உலக சுகாதார நாள் பெரும் பங்காற்றி வருவது கண்கூடு.

இவ்வருட உலக சுகாதார தின வாசகம் ‘அனைவருக்குமான ஒரு சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்க படுகிறது.

கோவிட்-19 உலகளாவிய தொற்று இதற்கான தேவையையும் சூழ்நிலையையும்
ஏற்படுத்தியுள்ளது. இன்றுவரை இத்தொற்று உலகெங்கும் 131.5 மில்லியன் நோயாளர்களையும், 2.9 மில்லியன் வரையிலான இறப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த ஒரு நூற்றாண்டில் ஒரு நோயினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் இழப்பாக அமைகிறது.

WhatsApp Image 2021 04 07 at 10.33.28 AM 'அனைவருக்குமான ஒரு சிறந்த ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்'

கோவிட்-19 உலகளாவிய தொற்றின் காரணமாக உலக மக்களின் உடல், உள ஆரோக்கியம் மட்டுமன்றி பொருளாதாரம், கல்வி, பண்பாடு, அரசியல் என மனித குலத்தின் மேம்பாட்டிற்கான அனைத்து செயற்பாடுகளும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்முக நாடுகள், வறிய நாடுகள் என அனைத்து பொருளாதார தரம் கொண்ட நாடுகளையும்
மக்களையும் பாரபட்சமின்றி பாதித்துள்ளது. இந்த நிலையானது அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்ற 2000 ஆண்டின் உலக

சுகாதார வாசகத்தை வலியுறுத்துவதாகவும் உலக நாடுகளுக்கு அந்த தேவையை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும், சமூகங்களும், நாடுகளும், பிராந்தியங்களும் முழு உலகமும் ஒரே குறிக்கோளுடன் அனைவருக்குமான ஒரு சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை
உருவாக்க முற்படாது விடின் மேலும் மனித குலத்தை தாக்க கூடிய பெரும் தொற்றுக்கள் மட்டுமன்றி தொற்றா நோய்களின் தாக்கத்தாலும் பேரழிவுகளை சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கிய வாழ்வின் வரைவிலக்கணமான உடல், உள, ஆன்மீக மற்றும் சமூக நலன் மேம்பாட்டை உருவாக்க பாடுபடுவோம் என இந்த நாளில் உறுதி எடுத்து கொள்வோம்.