அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில், “தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்”

112 Views

தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களானது பல்வேறு வலிகளையும் வேதனைகளையும் சுமந்த போராட்டங்களாகும். இந்த போராட்டங்கள் பல குடும்பங்களின் கண்ணீராக தொடரும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. இழப்புகளை எதிர்கொள்ளாத சமூகம் சுதந்திரத்தினை அடையமுடியாது என்பது பொதுவான கருத்துகளாக இருக்கின்றபோதும் தமிழர்களின் சுதந்திரத்திற்கான போராட்டமானது பெருமளவான இழப்புகளை எதிர்கொண்டபோதிலும் சுதந்திரத்தினை அடையமுடியாத நிலையே தொடர்ச்சியாக இருந்துவருகின்றது.

வடக்கு கிழக்கில் கடந்த 30வருடத்திற்கு மேல் நடைபெற்ற ஆயுதப்போராட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட இழப்புகளில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட இழப்புகளே அதிகமாக காணப்படுகின்றது. தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் அதிக விலைகளை கொடுத்தவர்களாக அவர்கள் இன்றும் அதன் வேதனையுடன்  உள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்த இழப்புகள் என்பது சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.1983ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வலிந்துகாணாமல் ஆக்கப்படுதல் என்ற பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டவர்களாக கிழக்கு மக்கள் காணப்படுகின்றனர்.

இந்திய இராணுவம் கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய இராணுவம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வரலாறுகளும் கிழக்கிலும் உள்ளது.

தமிழ் தேசிய கொள்கையில் உறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்ட காலமாக அக்காலம் இருந்த காரணத்தினால் கிழக்கில் அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துவந்த நிலையில் அதனை தடுப்பதற்காக அன்று இந்திய இராணுவத்தின் அனுசரணையுடன் இந்த செயற்பாடுகளை அன்றைய காலப்பகுதியில் செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் முன்னெடுத்தன.missing 5 அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில், “தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்”இன்றும் அக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் மீண்டும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பல பெற்றோர்கள் இருப்பதை மறக்கமுடியாது. இதேபோன்று 1990ஆம் ஆண்டு காலப்பகுதியானது கிழக்கு தமிழ் மக்களுக்கு மறக்கமுடியாத ஆண்டாகவேயிருக்கின்றது.

90ஆம்ஆண்டு காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவத்தினர், முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழ் ஒட்டுக்குழுக்கள் என பல தரப்பட்டவர்களினால் தமது தாயகத்தினை நேசித்தவர்களும் கல்வியியலாளர்களும் பொருளாதார நிலையில் உயர்ந்தவர்களும் எதிர்காலத்தில் சாவாலானவர்கள் என கருதப்படுபவர்களும் திட்டமிட்டு கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டார்கள்.

வெள்ளை வான் கலாசாரம் முதன்முதலில் கிழக்கில் தமிழர்கள் மீதே மேற்கொள்ளப்பட்டது.ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் இந்த வெள்ளைவான் கடத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதேபோன்று தமிழர்கள் மீது சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருந்த காழ்ப்புணர்ச்சியும் தமிழ் கல்விமான்களை கடத்தி காணாமல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டன.

உண்மையில் கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து இதுவரையில் சரியான புள்ளிவிபரங்கள் இல்லையென்பதே உண்மையாகும். கடந்த காலத்தில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் முறையாக நடவடிக்கைகள் கிழக்கில் முன்னெடுக்கப்படாத நிலையே இதற்கு காரணமாக அமைகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்கள் வடக்கிற்கு இணையாக முன்னெடுக்கப்பட்டுவந்தன.ஆனால் இன்று அந்த போராட்டங்களின் தன்மைகள் குறைவடைந்துவருகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினை தளமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுவந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை இன்று காணமுடியவில்லை. அந்த போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்கள் இன்று அதிலிருந்து ஒதுங்கிய நிலையிலேயே உள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

இதற்கு பிரதான காரணமாக அமைவது அச்சுறுத்தலாகும். குறிப்பாக கிழக்கில் செயற்பட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகிய நிலையிலேயே உள்ளனர். வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கண்காணிக்கப்படுகின்றன.போராட்டங்களில் ஈடுபடுவோர் பின்தொடரப்படுகின்றனர்.இதன்காரணமாக குடும்பங்களில் ஏற்படும் சச்சரவுகள் அவர்களை அதிலிருந்து விலகியிருக்கச்செய்கின்றன.

கிழக்கினைப்பொறுத்த வரையில் மூன்று இன மக்களும் வாழும் பகுதி இங்கு போராட்டங்களை முன்கொண்டுசெல்ல தடையில்லை. ஆனால் தாமதம் காணப்படுகின்றது. இங்கு பாதிக்கப்பட்ட தரப்பு மட்டுமே போராட்டத்தினை செய்ய முன்வருகின்றனர். கிழக்கில் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது.

புலனாய்வுத்துறையினர்,இராணுவ செயற்பாடுகளினால் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மனமுடைந்து மனவுளைச்சலுக்குள்ளாகுவதாக அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கபட்டவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி செல்வராணி தெரிவிக்கின்றார்.

இந்த போராட்டம் மொத்த தமிழினத்திற்கும் உரியது என்பதை யாரும் உணர்வதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

‘கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டுள்ள உறவுகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக அவர்கள்  அதிகமாகவுள்ள காரணத்தினால் அன்றாடம் கூலிவேலைகளுக்கு சென்றே தமது குடும்பத்தினை கொண்டுசெல்லும் நிலைக்குள்ளதால் போராட்டங்கள் தாமதமானகின்றன.’

அத்துடன் வடக்கினைப்பொறுத்த வரையில் தமிழ் தேசிய சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து அங்கு நடைபெறும்போராட்டங்களை முன்கொண்டுசெல்லும் நிலையுள்ளதுடன் அருட்தந்தையர்கள்,இளையோர் அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள் என பல வகையான பலம் அங்கு காணப்படுகின்றது.ஆனால் கிழக்கில் ஒரு சில பொது அமைப்புகளும் ஒரு சில அருட்தந்தையர்களுமே போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.

இதன்காரணமாக பல சவால்களுக்கு மத்தியிலேயே போராட்டம் முன்கொண்டுசெல்லப்படுவதாகவும் அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கபட்டவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி செல்வராணி தெரிவித்தார்.

புலம்பெயர் அமைப்புகளும் முற்றாக தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர்  தெரிவித்தார்.

இதேபோன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டம் அரசியல் சார்ந்த போராட்டம்தான். அதை அரசியல்வாதிகள் முன்னின்று அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்போராட்டம் 2000, நாட்களை கடந்து வடமாகாணத்தில் தொடர்சியாக நடைபெற்றுவருகின்றது என்பது உண்மை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக அந்தப்போராட்டம் நடத்தப்படாவிட்டாலும் இடை இடையே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கேட்டு போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்தப்போராட்டத்தில் உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்ற 138 உறவுகள் இறந்திருக்கின்றார்கள். போராட்டத்தில் நியாயங்களை தட்டிக்கேட்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்தேசி அரசியல் பரப்பில் உள்ளவர்கள் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இது அரசியலுடன் சம்மந்தப்பட்ட திட்டமிட்ட இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் என்பதை சகல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை தொடர்சியான போராட்டங்கள் இடம்பெறாவிட்டாலும் மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது போராட்டங்கள் இடம்பெறுகிறது.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்டு   தற்போது 13, வருடங்களை கடந்த நிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக கடந்த நல்லாட்சி அரசில் காணாமல் போனவர்களுக்கான செயல்பாடுகளை முன் எடுக்க ஒரு அலுவலகம் கண்துடைப்புக்காக ஏற்படுத்தி நிவாரணமும், மரணபதிவுகளையும் வழங்க தீர்மானித்திருந்தது. உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது நிவாரமோ, அன்றேல் மரணபதிவோ இல்லை. கண்முன்னே ஒப்படைத்த தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது அவர்களை எங்கே தடுத்து வைத்துள்ளீர்கள்? உயிருடன் இல்லை எனில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்கவேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கை.

இதனை இதுவரை இலங்கை அரசு ஏற்கவில்லை. இதற்காகவே சர்வதேச நீதியினை கோரி தொடர்போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் வாய்பேச்சுக்களை கேட்பதற்கு தயார் இல்லை என பாதிக்கப்பட்ட உறவுகள் தமது மன ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை காணமுடிகிறது.

அவர்களின் பார்வைக்கு அது சரியாக இருந்தாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன தடந்தது ? இதற்கான சர்வதே நீதி தேவை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றதை மறுதலிக்கமுடியாது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்திற்கு அரசியல் சார்ந்தவர்கள் சர்வதேச நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் அரியநேந்தின் மேலும் கூறினார்.

எவ்வாறானாலும் கிழக்கு மாகாணத்தில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள் உறவுகள் அமைப்பு மீளகட்டியெழுப்பப்படவேண்டும்.அவர்கள் மத்தியில் காணப்படும் அச்ச உணர்வுகள் நீக்கப்பட்டு இந்த போராட்டம் வடக்கு கிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கும்போதே அந்த போராட்டம் வெற்றிபெற்ற போராட்டமாக அமையும்.

கிழக்கில் ஒட்டுக்குழுக்களும் அரச புலனாய்வுத்துறையும் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை செயலிழக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை உடைத்தெறிந்து முன்கொண்டுசெல்வதற்கு தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்படமுன்வரவேண்டும்.

மட்டு.நகரான்.

 

 

Leave a Reply