அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய 2024 – அகிலன்

விடைபெற்றுச் செல்லும் 2024 சா்வதேச அரங்கில் மட்டுமன்றி, இலங்கை அரசியலிலும் அதிரடியான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் வீழ்ச்சியை இந்த ஆண்டில் பாா்க்க முடிந்தது. தமிழ்த் தலைமைகள் தீா்க்கமான முடிவுகளைத் எடுக்காவிட்டால், இந்த வீழ்ச்சி எதிா் காலத்தில் பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற உண்மையும் உணா்த் தப்பட்ட ஒரு ஆண்டாகவே 2024 விடை பெறுகின்றது.

2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள், உலக அரசியலில் புதிய பாதைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியுள்ளமை, இந்தியாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமரானது, இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான வெற்றி போன்றவை, எதிர்கால அரசியலில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வருட தோ்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒரு முட்டுச் சந்தில் கொண்டுவந்து விட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் நாற்பது நாடுகளில் இவ்வருடம் தோ்தல் நடைபெற்றது.  பல இடங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், உலக அரசியலில் புதிய சமநிலைகளை உருவாக்கும். இந்த ஆண்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளு தல், எதிர்கால அரசியல் போக்குகளை அறிய மட்டுமன்றி, அதற்கான திட்டமிடலுக்கும் உதவும். அரசியல் மாற்றங்கள், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதால், அவற்றை கவனமாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

இலங்கையில் இவ்வருடம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை, 2022 ஆம் ஆண்டில் அரகலயாவில் (Aragalaya) ஆரம்பமான மக்கள் எழுச்சியின் ஒரு தொடர்ச்சியாக பார்க்கலாம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்துக்கு எதிரான பெரும் மக்கள் எழுச்சி 2022 இல் ஏற்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பதவி விலகலை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். விளைவாக, கோட்டபாய பதவி விலகினார், ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியானாா்.

ரணிலின் நிர்வாகம் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரு வதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டாலும், அவா் மீது மக்கள் மத்தியில் நிலையான அரசியல் நம்பிக்கை இல்லாமை, பொருளாதார சீர்திருத்தங்களில் பொதுமக்கள் எதிர்கொண்ட சுமைகள், பொருளாதாரக் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ராஜபக்ஷக்கள் மீதான அவரது மென் போக்கு போன்ற காரணங்களால் அவர் 2024 தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.

மக்கள், புதிய மாற்றத்தை நாடி, புதிய அரசியல் தலைமைத்துவத்தை விரும்பினர். பாரம்பரிய அரசியல் தலைமைகள் மக்களால் முற் றாகவே  ஒதுக்கப்பட்டனா். 600 க்கும் அதிகமான முன்னாள் அரசியல்வாதிகள் 2024 இல் அரசியலி லிருந்து ஒதுங்க நிா்ப்பந்திக்கப்பட்டனா். 2024 அரசியல் மாற்றம் 2022 அரகலயாவில் உருவான மக்கள் எதிர்ப்பின் நீட்சி அல்லது அதன் அரசியல் வெற்றியை பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம்.

2024 செப்ரெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் அநுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்ட வெற்றியின் மூலம் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றாா். இது புதிய அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது. அதற்கான ஆரம்பமாகவும் அமைகின்றது. எதிா்கால அரசியல் ஒரு புதிய திசை யில் பயணிக்கப்போகின்றது என்பதை உணா்த்து வதாகவும் அநுரவின் அந்த வெற்றி இருந்தது.

இதன் தொடா்ச்சியாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெப் போதும் இல்லாதவகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது. அதாவது, அநுர அலை அந்த பாரிய வெற்றிக்கு காரணமாகியது.

இந்த மாற்றம், இலங்கையின் அரசியல் சூழலில் புதிய போக்கை அறிமுகப்படுத்துகிறது. பொதுமக்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்ட விரக்தியால் மாற் றத்தை எதிா்பாா்த்து தமது வாக்குகளைப் பயன் படுத்தினாா்கள். ஊழல் மோசடிகள் இல்லாத நிா்வாகம் மக்களின் எதிா்பாா்ப்புக்களில் முக்கிய மானதாக இருந்தது.

இந்த மாற்றம், இலங்கையின் எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்க முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. புதிய அரசியல் சக்திகளின் எழுச்சி,  சமூக -பொருளாதார பிரச்சி னைகளில் புதிய அணுகுமுறைகளை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

தேசிய மக்கள் சக்தியில் இந்த எழுச்சி பல்வேறு காரணங்களால் முக்கியமானதாகின்றது. உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தனிக் கட்சி ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருப்பது இதுதான் முதன்முறை.

இரண்டு தடவை மூா்க்கமான முறையில் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, பெரும் இழப்புக்களுடன் தோல்வியைத் தழுவி, நீண்டகாலம் தடை செய்யப்பட்ட அமைப்பாகவும் இருந்து, கடுமையான நெருக்கடிகள் போராட்டத் தின் மத்தியில் ஜனநாயக அரசியலில் பிரவேசித்து, மக்களுடைய கணிசமான ஆதரவுடன் அதிகார த்தை ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தி கைப் பற்றியிருப்பது என்பது நினைத்துப் பாா்த்திருக்க முடியாத ஒரு பிரமாண்டமான அரசியல் வெற்றி!

இதன் மூலம் உருவான அநுர அலை பாரம்பரிய தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதிக் கத்தை குறைத்து, தமிழ் பகுதிகளிலும் தேசிய அளவில் புதிய அரசியல் சக்திகளின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. தமிழ் பகுதிகளில், தமிழ் தேசியக் கட்சிகளின் உட்பிளவுகள் மற்றும் தலைமைத்துவப் பிரச்சினைகள், இந்த மாற்றத்துக்கு முதலாவது காரணமாக இருந்தன. பொருத்தமான அரசியல் வேலைத் திட்டங்களோ, செயற் பாடுகளோ இல்லாமல் வெறுமனே தோ்தல் அரசியலை இந்தக் கட்சிகள் நடத்தியதும் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்புக்கு மற்றொரு காரணம்.

தமிழ் மக்கள் மத்தியில் மற்றொரு தெரிவு இல்லாமையால், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது என்ற முடிவை பெரும்பாலான தமிழா்கள் எடுத்தாா்கள். மட்டக்களப்பு தவிா்ந்த அனைத்துத் தமிழ்ப் பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற இதுதான் காரணம்.

பாரம்பரிய தமிழ் தேசியக் கட்சிகள், தங்களின் அரசியல் நிலைப்பாடு களையும், செயற்பாடு களையும்  மறுபரி சீலனை செய்ய வேண்டிய நிா்ப்பந்தம் இப்போது உரு வாக்கியுள் ளது. பொதுத் தோ்தலின் முடிவு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கசப்பான பாடத்தை கொடுத் திருந்தாலும் கூட, தமது அணுகுமுறையில் மாற்றங் களை ஏற்படுத்திக் கொள்வதற்கு அந்தக் கட்சிகள் இப்போது கூட தயாராகவில்லை.

போா் முடிவுக்கு வந்தபோது, தமிழ் மக்களுடைய தலைமை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிடம் சென்றது. ஆனால்,வரலாற்றில் தமக்கு வழங்கப்பட்ட முக்கியமான அந்தப் பொறுப்பை தனிப்பட்ட காரணங்களால் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறடித்தன. 2004 ஆம் ஆண்டில் 22 நாடாளுமன்ற உறுப்பினா்களை அவா்களால் பெற முடிந்தது. இப்போது 10  தமிழ்த் தேசிய உறுப்பினா்கள்தான் தெரிவாகியுள்ளாா்கள்.

தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் பிரச்சினை, பொறுப்புக்கூறுதல், போரால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் என்று எந்தப் பிரச்சினைக்கும் அவா் களால் தீா்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இதன் உச்சகட்டமாக வழமையாக 13 என்பதையே தொடா்ந்தும் உச்சரிக்கும் இந்தியத் தரப்புக்கூட இப்போது அதனையும் கைவிடும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விவகாரத்தை கூட, இந்தியத் தரப்புக்கு எடுத்துச்செல்வதை தவித்தமைதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நிலையில், பிறக்கப்போகும் புதுவருடம் நம்பிக் கையளிப்பதாக இருக்க வேண்டுமானால்,தமிழ்க் கட்சிகளும் தமது போக்கில் கணிசமான மாற்றங் களைச் செய்ய வேண்டும்.