அதிஉயர் பாதுகாப்பு சிறையாக மாற்றப்படும் பூஸா சிறைச்சாலை

இலங்கையில் காலி மாவட்டத்தில் உள்ள பூஸா சிறைச்சாலையானது, அதி பாதுகாப்பு சிறைச்சாலையென பெயரிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், அவதானத்துக்குரிய சகல கைதிகளும் எதிர்வரும் வாரங்களில் பூஸாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன், 120 கைதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுமாணத்துறை நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சம்பளமும் கைதிகளுக்கு வழங்கப்படும் என்றார். இந்தச் சம்பளமானது கைதிகளின் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதென்றார்.

குறித்த 120 கைதிகளும் வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள 250 கைதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றும் இவர்கள், 7 வருட சிறைத்தண்டனையைப் பெற்றவர்கள் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.