அதானிக்காகத்தான் ராஜபக்சே கும்பலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை இந்தியா எதிர்க்கவில்லையா?

அதானியின் மோடி இந்தியாவானது வழக்கமாய்  அனைத்து இடங்களிலும் இராஜபக்சே கும்பலை நேரடியாய் ஆதரித்து காப்பாற்றவே செய்யும்.

ஆனால் அண்மையில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் இராஜபக்சே கும்பலுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்காததோடு வழக்கத்திற்கு மாறாய் வாக்கெடுப்பிலும் பங்கெடுக்காமல் இருந்தது. ஒருக்கால் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்தபின் இவ்வாக்கெடுப்பு நடந்திருந்தால் இத்தீர்மானத்திற்கு எதிராய் வாக்களித்திருக்குமோ? இறுதி நேரத்தில் அதானிக்கு துறைமுகத்தை இராஜபக்சே கும்பல் கொடுத்ததால்தான் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்ததா?

இவ்வாறு வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்ததே இராஜபக்சே கும்பலிடம் பேரம் பேசுவதற்காகவும் இருக்கலாம்.  அதானிக்காவே ஆட்சியை நடத்தும் மோடியின் இந்தியாவானது இந்தியாவெங்கும் இருக்கும் பல துறைமுகங்களை அதானிக்கு தாரை வார்ப்பது போதாததுபோல் விரிவாதிக்க/அகண்ட பாரத இந்தியாவிற்குள் வரும் இலங்கையிலும் துறைமுகங்களை கையளிக்கிறது.

அதானி போன்ற இந்தியப் பெருமுதலாளிகளின் நலனுக்காகவே முள்ளிவாய்க்காலை பெற்றெடுத்த விரிவாதிக்க இந்தியா இப்போது அகண்ட பாரதக்காரர்களின் கையில் இருக்கும் நிலையில் முள்ளிவாய்க்காலை செயற்படுத்திய கொலைகாரர்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமா? அதிலும் சென்ற ஆண்டைப் பொறுத்தவரையில்

இலங்கையில் நேரடி அன்னிய மூலதனத்தை  முதலீடு செய்ததில் மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது அகண்ட பாரத இந்தியா. அது முள்ளிவாய்க்காலுக்கு பிந்தைய இலங்கை ஆட்சியாளர்களை உலக அரங்கில் காப்பாற்றி வந்தாலும் மேற்காண் நேரடி முதலீட்டில் முதல் இடத்திற்கு வரமுடியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாய் மலேஷியாவோ சீனாவோ இங்கிலாந்தோ ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றுதான் அந்த இடத்திற்கு வரமுடிகிறது. எனினும் ஆண்டுக்கணக்கில் முதலீடு மேற்கொள்ளப்படுவதையும் மொத்தமாய் கணக்கிட்டால் இந்தியாதான் இலங்கையில் நேரடி அன்னிய முதலீட்டை மேற்கொண்டதில் முதலிடத்திற்கு வரும். அதை தக்கவைத்துக் கொள்வதற்குத்தான் ஈழ அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்கினார் இந்திரா காந்தி. இராஜீவ் காந்தியும் அதற்காகவே இந்திய அமைதிப்(?) படையை ஈழத்திற்கு அனுப்பினார். இதனாலெல்லாம் ஈழச் சிக்கல் தீராமல் விரிவாதிக்க இந்தியாவுக்கு தலைவலியாய் இருந்ததால் முள்ளிவாய்க்கால் அரங்கேற்றப்பட்டது.

‘இராவணன்’ ஆண்ட இடத்தில் முள்ளிவாய்க்காலை ‘இராமன்’ வழிவந்தவர்கள் அரங்கேற்றினாலும் இவர்களால் வீழ்த்தப்பட்டு பரவிய இடத்திலிருந்து எழுந்த போட்டியினால் பழைய முதல் இடத்தை இன்னமும் பிடிக்கமுடியவில்லை.

போதாதென்று இந்தியா, மலேஷியா ஆகியவற்றின் காலனிய எஜமானான இங்கிலாந்தும் போட்டியில் இறங்கிவிட்டது. ‘இராமன்’ வழிவந்தவர்களால் விரட்டப்பட்டு உருமாறிய பவுத்தத்தின் வழிவந்தவர்களான சீன ஏகாதிபத்தியவாதிகளை காரணங்காட்டி  முள்ளிவாய்க்கால் அரங்கேற்றப்பட்டது. ஆனாலும் இராமன் வழிவந்தவர்களை அடக்கியாண்டதோடு ஈழத்தின் இனச் சிக்கலை பெற்றதெடுத்த அவர்களின் எஜமான் இங்கிலாந்து ஏகாதிபத்தியமானது இலங்கையில் நேரடி அன்னிய முதலீட்டில் சென்ற ஆண்டில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. பிடித்த இடத்தை தக்கவைப்பதற்குத்தான் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டுவந்தது. இத்தீர்மானத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு அதானிக்கு இலங்கையின் ஒரு துறைமுகத்தை பெற்றுக்கொண்டது அகண்ட பாரத மோடியின் இந்தியா.

தோழர் பாஸ்கர்