முல்லைத்தீவு, நீராவியடி, பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த சம்பவமானது தமிழ் மக்களைக் குறிப்பாக இந்து மத சகோதரர்களை மிகமோசமாக அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளமை எம்மையெல்லாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது , இந்த அடாவடித்தனங்களை அரங்கேற்றியவர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.
அப்போதுதான் நீதித்துறையின் சுதந்திரமும், பக்கச்சார்பற்ற தன்மையும் பாதுகாக்கப்படும் என வலியுறுத்திக் கூறுகின்றோம் என்று யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.வி.பி.மங்களராஜா அடிகளார் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னர் ஒரு தடவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்று தண்டனைக்காலம் முடியமுன் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் வெளியேறிய ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரின் இன்னுமொரு நீதிமன்ற அவமதிப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்து மக்களுடைய ஆலய வளாகத்திலுள்ள தீர்த்தக்கேணியின் அருகாமையில் காலஞ்சென்ற பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமையும், நீதிமன்றத் தீர்ப்புக்களை தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியாக மீறும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் இது ஒரு பௌத்த நாடு, தாம் எங்கு வேண்டுமானாலும் தங்கள் இறந்த பிக்குகளைத் தகனம் செய்யலாம் என்பதனையும் நீதிமன்ற தீர்ப்பு தம்மைக் கட்டுப்படுத்த முடியாது என்ற கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய பொலிஸார் அதனை உதாசீனம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பும் அத்துடன் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடு அரங்கேறுகையில் அதற்கு பாதுகாப்பு வழங்கியமையையும், நீதிமன்றத் தீர்ப்பை விளக்கி எடுத்துச் சொல்ல முயன்ற சட்டத்தரணிகளையும் அவர்களோடு வந்தவர்களையும் தாக்கிக் காயப்படுத்தியமையையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த அடாவடித்தனங்களை அரங்கேற்றியவர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். அப்போதுதான் நீதித்துறையின் சுதந்திரமும், பக்கச்சார்பற்ற தன்மையும் பாதுகாக்கப்படும் என வலியுறுத்திக் கூறுகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.