‘அஞ்சலி செலுத்துவதை தடுப்பது மனித  நாகரீகமற்ற செயல்’ விந்தன் கனகரட்ணம்

717 Views

“இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பல ஆயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். அந்தப் போராளிகள் விதைக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களது உறவுகள்  சென்று பிரார்த்தனை செய்யவும், அஞ்சலி செய்யவும் இந்த அரசாங்கம்  இடமளிக்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவது என்பது மனித  நாகரீகமற்ற செயல்” எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்.

மேலும் அவர் கூறுகையில்,

“இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளை நினைவுகூருவதாக நினைத்து மக்களுடைய உணர்வுகளை தடுப்பது தவறு. தமது உறவுகளை நினைத்து நிம்மதியாக அவர்களின்  ஆத்மசாந்தி பிரார்த்தனைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். தற்போது முன்னெடுக்கும் அச்சுறுத்தல்களை நீக்கிக்கொள்ள வேண்டும்.

ஏனைய பொதுமக்கள் அரசியல்வாதிகள் கூட போராளிகளின் உறவினர் மற்றும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களும் துயிலுமில்லங்களுக்கு சென்று  அஞ்சலி செலுத்த வேண்டும் .அதையும் தடுத்து நிறுத்தினால், அது  கண்டிக்கப்படவேண்டிய  ஈனச்செயல் ஆகும்.

இந்த முறை இந்த அரசு எமது நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைபோடுமாக இருந்தால், போராளிகளின் பொற்றோர்களை ஒன்றிணைத்து அந்த தடைகளுக்கு எதிராக போராடுவோம்.

துற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றை கவனத்தில் எடுத்து சுகாதார நடைமுறைகளின்படி எமது போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.” என்றார்.

Leave a Reply