அகதிகளை சித்திரவதைப்படுத்திய ஆஸ்திரேலியா: காட்சிப்படுத்தி உள்ள AI படங்கள்

AI Image Australia detention 1 அகதிகளை சித்திரவதைப்படுத்திய ஆஸ்திரேலியா: காட்சிப்படுத்தி உள்ள AI படங்கள்

நவுரு, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்கள் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் மூலம் முகாம்களில் நிலவிய சூழல் குறித்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருந்த ஆண், பெண் அகதிகளிடையே மேற்கொண்ட 300 மணி நேர நேர்காணல்கள் வழியாக எழுத்து வடிவிலான சாட்சியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கேற்ப AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் முகாம்களின் நிலைமைகள், சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை காட்சிப்படுத்தியுள்ளன.

சுமார் நான்காண்டுகள் குடிவரவு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் அகதி மனுஸ்தீவு முகாமில் ஒன்பது மாதங்கள் சிறைவைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

“கடல்கடந்த தடுப்பின் வலிநிறைந்த காலத்தை உள்ளடக்கிய எங்களது கதைகள் மக்களின் கண்களை திறக்கும் என்று நான் நம்புகிறேன். புகலிடம் கோரும் மக்களை கையாளும் போது அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என சமன் எனும் அகதி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சாட்சியங்களும் AI படங்களும் ஆஸ்திரேலிய வரலாற்றின் இருண்ட பக்கத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது எனக் கூறியிருக்கிறார் Maurice Blackburn சட்ட நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞர் ஜெனிபர் கனிஸ்.