இலங்கையும் சித்திரவதைகளும்-வாமணன்

597

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.

பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற பெயரில் தமிழர்களைக் கைது செய்வது இலங்கை அரசின் சட்ட அங்கீகாரம் கொண்ட நடைமுறையாகும். கால வரையறை அற்றுத் தடுத்து வைக்கலாம் என்ற சட்ட சரத்துக்கள் மூலம் மனித வதைகளைச் செய்ய பயங்கரவாதத் தடைச் சட்டம் இடமளிக்கின்றது.

தமிழ் இனத்தைச் சேர்ந்த இலங்கைக் குடிமக்கள் அனைவரும் இச்சட்டத்தின் கீழ் வயது பால் வேறுபாடுகளின்றி தடுப்புக்காவலிலும் தடுப்பபு முகாம்களிலும் மனிதவுரிமை சட்ட விதிகளை மீறும் விதமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு தடுத்துவைக்கப்படுவோர் பெரும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது இலங்கையில் தமிழர்களின் வாழ்வியலை கேள்விக்குள்ளாக்குகிறது.

இலங்கை மக்களால் மக்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமது நாட்டின் சிறுபான்மைக் குடிமக்களை சட்டத்தின் துணையோடு சித்திரவதை செய்யக்கூடியதாக உள்ளது. ஆபத்தான ஜனாதிபதிக்கான (நிறைவேற்று) அதிகாரங்கள் சிறுபான்மை இனத்தின் மீதான அடக்குமுறைகளைக் கடந்து பெரும்பான்மை இனத்தின் மீதே கருத்துச் சுதந்திரப் பறிப்பையும் கொலைகளையும் செய்யும் துணிவினைக் கொடுத்துள்ளது.

சித்திரவதையின் பொருள்

சித்திரவதை என்பது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ஒருவரிடமிருந்து தகவலை அறிவதற்காக திட்டமிட்ட உள்நோக்கத்தோடு பாரபட்சமாக உடல் உள ரீதியாக புண்விளைவித்தல் என்று பொருள்படும். விசாரணை ஒன்றுக்காக நீதிமன்ற ஆணை பெற்றுத் தடுத்து வைத்தல் சித்திரவதை அல்ல.

ஆனால் பாதுகாப்புக் காரணங்களின் பேரில் விசாரணைகள் செய்கின்ற போது மக்கள் சேவையாளர்களாகப் பணி செய்யும் அதிகாரிகள் மனிதவுரிமைகளை மீறும் விதமாக சித்திரவதை செய்கிற நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இனரீதியான பாகுபாடு காட்டப்பட்டு ஈழத்தமிழர்கள் சட்ட விதிகளை வைத்துக் கைது செய்யப்பட்டு மறைவான இடங்களில் சாட்சிகளற்று இரகசியமான முறையில் துன்புறுத்தப்படுவது பல தசாப்தங்களாக இலங்கையில் நடைபெறும் கொடுமையாகவுள்ளது.

சித்திரவதையினை மானுடவியல் சட்டங்கள் குற்றமாக கணிக்கின்றன. பன்னாட்டுச் சட்டங்களுக்கு இலங்கையில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. சித்திரவதைக் கோட்பாடுகள் 1980களில் ஜே.வி.பி இயக்கத்தை அழிப்பதற்காக பெரும்பான்மை சிங்கள இனத்தினுள் கையாளப்பட்ட உபாயமாகவுள்ளது. இது 219 மையங்களில் இலங்கை முழுவதும் பரவலாக நடைபெற்றிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP)தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் சித்திரவதைகள்

கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகளின்போது சித்திர வதைக்கு உள்ளாகின்றனர். தடி,தடித்த வயர் போன்றவற்றால் அடித்தல், சூடான இரும்புக்கம்பி, எரியும் சிகரட்டால் சுடுதல், மின் அழுத்தியால் சுடுதல்,விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல்களில் கட்டித் தூக்குதல், மூட்டுக்கள் வலிக்குமாறு கைகளைக் பின்புறமாகக் கட்டி தூக்குதல்,தலைகீழாகக் கட்டித் தூங்கவைத்து அடித்தல், பெற்றோல் நிறம்பிய பொலித்தீன் பையால் தலையை மூடி மூச்சுத் திணறவைத்தல், தலையைத் தண்ணீரில் மூள்கடித்து மூச்சுத் திணறவைத்தல் போன்ற சித்திர வதைகள் பிரபலியமானவை.

இந்த வகையான சித்திரவதை முகாம்கள் நடத்தப்பட்டதை இலங்கை அரசு மறுத்துவருகிறது.இதைவிட பட்டினிபோடுதல்,சிகிச்சையளிக்காமல் தவிக்கவிடுதல், இருட்டறையில் போடுதல் போன்றவைகளும் இவற்றுள் அடங்கும்.

பெண் சந்தேக நபர்களுக்கு பாலியல் வதை கூட்டு வன்புணர்வு என்பனவும் ஆண்களுக்கு பாலியல் வதைகள் பாலுறுப்புக்களில் புண்விளைவித்தல் விபரிப்பதற்கு முடியாத அளவுக்கு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா படைகளால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவரின் வாக்குமூலம்- பிபிசி ஆங்கில சேவை நேர்காணல்( https://www.bbc.com/news/world-asia-24849699)

இவை மனிதகுல வாழ்வியலின் பாதுகாப்பின்மையை இலங்கையில் இன்னும் நிலைபெறும் யதார்த்தமாக விட்டுவைத்துள்ளது. இந்த விதமாக உளக்காயங்களோடு இலங்கையில் மக்கள் நீதியற்று வாழ்கிறார்கள். இந்த நிலைமையை மாறாது வைத்துக்கொள்வதால் சிறுபான்மையினர் அமைதி வாழ்வு தேடி வெளிநாடுகள் நோக்கி உயிர் விலை கொடுத்துத் தப்பிச் சென்று தஞ்சமடைய நேர்கிறது.

சித்திரவதையின் சமூக விளைவு

இந்த வகையான பாதிப்புற்றவர்களில் எத்தகைய உளக்காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற அறிவு சமூகத்தில் இல்லை. உளவளம் பாதிக்கப்பட்ட இந்த உளக்காயங்களுக்கு உள்ளானோர் உரிய சிகிச்சை பராமரிப்பின்றி சமூகத்தில் விடப்படுகின்றார்கள்.

வறுமை வளப்பற்றாக்குறை போன்ற பொதுவான பிச்சினைகளின் நடுவில் இந்த உளக்காயமுள்ளோரும் சவால்களை முகம்கொடுக்கின்றனர். சாதாரணமானவர்களே எதிர்கொள்ளத் திண்டாடும் அதே நிலைமைகளை உளப்பாதிப்புற்றோர் எதிர்நோக்கும்போது தாக்கங்கள் மோசமாக இருக்கும்.

இதனால் குடும்ப வாழ்வியலில் அமைதியின்மை,சகித்துக்கொள்ளாமை,பிணக்குகள், சமூகமயப்படாமை,வன்முறைகள்,தற்கொலை முடிவுகள் என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன.

கண்டுகொள்ளப்படாத பிந்திய உளக்காய அழுத்த நோயாளிகளாக  பலர் தாயத்திலும் புலம்பெயர்ந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை சாதாரண மனிதர்களை நடாத்துவதுபோல நடாத்த முடியாது. பெற்றோர் முதல் வளரும் இளம் சந்ததியினுள்ளும் இப்பாதிப்புக்கள் தாக்கம் செலுத்துவதால் குற்றச் செயல்கள் பெருகும் வாய்ப்புக்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளது.

தீர்வுகள்

உளப்பாதிப்பு பற்றிய அரச கட்டுமானங்களின் தேவை உணரப்பட்டு நிறுவன உருவாக்கங்கள் போதியளவு நடைபெறவில்லை. இந்த விளைவுகளை மாற்றத் தேவையான உளவளத்துணை,புரிதலுடன் கூடிய சமூக பராமரிப்பு என்பன போதிய அளவில் மேற்கொள்ளப்படுவது அரிதாகவுள்ளது.

பொதுமக்களிடமும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மிகவும் குறைவாக உள்ளது. புலம்பெயர்துள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் அமைப்புக்களும் இல்லை.

சித்திரவதைகள் பற்றிய அறிவு பாடசாலை மட்டங்களில் இருந்து அறிமுகப்படுத்தப்படவேண்டும். மனிதவுரிமைகள் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மட்டங்களுக்கும் அத்தியாவசியமாகக் கொண்டுவரப்படவேண்டும். நடந்த தவறுகள் உலக நியமங்களின்படி விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். வரலாறுகள் பாடமாக்கப்பட வேண்டும்.

விசாரணைகள் சட்டத்தின் வெளிச்சத்தில் இருந்து மறையாதவாறு ஒளிப்பதிவு கருவிகள் இணைக்கப்பட்ட அறைகளில் நடைபெறுவதை தற்கால தொழில் நுட்ப உலகம் உறுதிசெய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்காக உளவளத் துணைசெய்யும் தேவைகளைப் புரிந்துகொண்ட துறைசார் அறிவார்ந்த சமூகம் உரிய வகையில் துணைசெய்யவேண்டும்.