ஞானசார தேரரின் மோசமான, பிழையான கருத்துக்களை ஊடகங்களும் தூக்கிப் பிடிக்கின்றன

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புகளுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் மோசமான, பிழையான கருத்துகளை சில ஊடகங்களும் தூக்கிப்பிடித்துகொண்டு காவித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் பெரும்பான்மையின மக்கள், இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்படைந்து, அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளும் பிரச்சினைகளும் ஏற்பட காரணமாக அமைந்துவிடுமோ என தாம் அச்சமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்களை விசாரணைக்கு அழைப்பது மாத்திரமின்றி, அவர்களின் கருத்துகளுக்கு உரிய பிரசாரங்களையும் வழங்க, ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட், தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்அவர்  நேற்று (19) சாட்சியமளித்திருந்தார்.