வௌ்ளை வேன் விவகாரம் – ஊடக சந்திப்பு குறித்த விசாரணை இறுதி கட்டத்தில்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது பிரதி சொலிசிட்டர் நாயகம் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் வழக்கின் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த ஊடக சந்திப்பில் வௌ்ளை வேன் சாரதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகிய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

இது தொடர்பில் நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வினவிய போது, குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையின் முன்னேற்ற அறிக்கை அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் அவர்களால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.