இறுதிக் கட்ட மோதலுக்குத் தயாராகும் சஜித்: ஐ.தே.க.வின் முக்கிய கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற மிகமுக்கிய கூட்டமொன்று இன்று சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும் சஜித்துக்கு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பச்சைக்கொடி காட்ட ரணில் மறுத்துவருகிறார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் வலுத்துள்ளது.

தலைமைப்ப தவியில் ரணில் நீடிப்பார் என்ற நிலை உருவானதால் புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சி யில் சஜித் தரப்பு இறங்கியுள்ளது. இதனால் விழிப்படைந்த ரணில் தரப்பு, கட்சி பிளவுபடு வதை தவிர்ப்பதற்காக ஐ.தே.கவின் தலைமைப் பதவிக்கு கரு ஜயசூரியவுக்கு வழங்கும் வகையிலான காய் நகர்த்தலில் ஈடுபட்டுவருகின்றது.

எனினும், தலைமைத்துவ சபை ஒன்றை அமைப் பதே ரணிலின் வியூகமாக உள்ளது. ஆனால், தலைமைப்பதவி சஜித்துக்கே வழங்கப்பட வேண்டும் என அவர் ஆதரவு எம்.பிக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இன்று நடைபெறும் கூட்டத்தில் உறுதியான – இறுதியான முடிவு அறிவிக்கப்படாவிட்டால் சஜித் தரப்பு மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்றும் அதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.

இதன்படி புதிய கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர்களாக ஹரின் பெர்னாண்டோ, அஜித் பி. பெரேரா, நளின் பண்டார, சுஜீன சேனசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். திஸ்ஸ அத்தநாயக்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.