ஆசியர்களையும், கறுப்பினத்தவரையும் கூடியளவில் தாக்கும் கொரோனா

இங்கிலாந்தில் ஒப்பீட்டு ரீதியில் பெருமளவிற்கு இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தும், ஆபிரிக்கா, கரிபியன் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய; முறையே ஆசியர்களையும், கறுப்பினத்தவர்களையுமே கொரோனாவானது ஒப்பீட்டளவில் கூடியளவில் தாக்கியுள்ளது (படம்1).

இதற்கான காரணத்தை அறிய ஆய்வுகள் இனித்தான் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர்களே கூடுதலாக நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிக்காக்கோவில் தாக்கப்பட்டவர்களில் 70 விழுக்காடு கறுப்பினத்தவர்களே (சிக்காக்கோ மக்கள் தொகையில் 33% மட்டுமே அவர்கள்) ஆவார்கள். அங்கு மேற்கொண்ட ஒரு ஆய்வில் சில முடிவுகளைப் பெற்றுள்ளார்கள்.

  1. கறுப்பினத்தவர்கள் கூடியளவு சொந்த வீட்டினைக் கொண்டிராமை. (இட நெருக்கடி)

2.இன்றியமையாத சேவைகளில் கூடியளவு கறுப்பினத்தவர்கள் வேலை செய்தல்.

3.கறுப்பினத்தவர்கள் கூடியளவு மருத்துவக் காப்புறுதி பெற்றிராமை.

போன்ற சில காரணங்கள் முதற் கட்ட சிக்காக்கோ ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றினை முறையே இங்கிலாந்திலுள்ள ஆசியர்களின் பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1.வீட்டு உடமையாளர் – இதனைப் பொருத்தவரை ஆங்கிலேயரில் 68% ஆகக் காணப்படும் அதே வேளை இந்தியர்களில் (ஆசியர்களில்) இது 74% ஆக சிறப்பாகவேயுள்ளது. {Source: Ethnicity facts and figures 2016 -2018}

  1. இன்றியமையாத சேவைகளில் வேலை – படம் 2 இனைப் பாருங்கள். மருத்துவர்களில் மட்டுமே ஒரளவிற்கு ஆசியர்கள் உள்ளார்கள். இங்கும் வெள்ளையர்களே கூட. செவிலியர்கள், அம்பூலன்சில் வேலை செய்வோர் வெள்ளையர்களே கூடுதல்.

chart2 ஆசியர்களையும், கறுப்பினத்தவரையும் கூடியளவில் தாக்கும் கொரோனா

  1. இங்கு இலவசிய மருத்துவம் (NHS) என்பதால் காப்புறுதி பொருந்தாது.

எனவே அமெரிக்கக் காரணங்கள் இங்கு பொருந்தி வரவில்லை. இங்கும் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

எனது நோக்கில் பின்வருவன காரணங்களாகவிருக்கலாம். (இது ஒரு துறை சார்ந்த ஆய்வன்று)

1.ஒப்பீட்டு ரீதியில் எம்மவர்களிற்கு நாள்பட்ட நோய்கள் கூடுதலாகவிருத்தல். எடுத்துக் காட்டாக, நீரிழிவு 2 (type 2) வகையானது ஒரு வெள்ளையரைத் தாக்குவதை விட ஆறு மடங்கு கூடுதலாக தென்னாசியர்களைத் தாக்குகின்றது.

  1. கை கழுவுதல்-

முகநூலில் வேண்டுமானால் கை கழுவுவது எமது முன்னோரின் பழக்கம் எனக் கம்பு சுற்றலாம், ஆனால் கொரோனா வரும்வரை எம்மில் பலரிற்கு தொற்று நீக்க எவ்வாறு கை கழுவுவது எனச் சரியாகத் தெரியாது. ஒப்பீட்டு ரீதியில் ஏற்கனவே வெள்ளையினத்தவர்கள் கூடியளவு விழிப்புணர்வு கொண்டவர்கள். உண்பதற்கு கைகளைப் பயன்படுத்தும் நாம் கூடியளவில் இதில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் தண்ணீரில் கையை நனைப்பது தொற்று நீக்கப் பயன்படாது. அதே போன்று எம்மவர்களிடம் முகத்திரை அணிவது பற்றிய விழிப்புணர்வும் குறைவு (அதாவது மாசடைந்த கையினாலேயே முகத்திரையினைத் தொடுவது போன்ற).

  • கூட்டமாக வாழ்தல் – ஒப்பீட்டுரீதியில் இதுவும் எம்மிடம் கூடுதல். உறவினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு வகைகளில் நாம் சமூகத் தூரமாக்கலினை மீறி விடுகின்றோம்.
  • மதப் பிற்போக்குத்தனங்கள் – இந்துக்களும், கிறித்தவர்களும் சரி எம்மவர்கள் மத வழிபாடுகளிற்காக மார்ச் இறுதி வரை இங்குள்ள வழிபாட்டுத் தலங்களிற்குச் சென்றே வந்தார்கள். மேலும் இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் எச்சரிக்கையின்றியிருத்தல். அதாவது மதம் அறிவியலைவிடப் பெரியது என்ற கருத்து. இவ்வாறான பிற்போக்குத்தனம் வெள்ளையினத்தவர்களிடம் குறைவு.
  • போரிற்கேயே தப்பி வந்த எம்மை கொரோனா என்ன செய்யும் என்ற அசட்டை சில ஈழத் தமிழர்களிடமுண்டு.
  • அச்சத்திற்கும், எச்சரிக்கைக்குமிடேயேயான சமநிலை பற்றிய விழிப்புணர்வு இன்மை. சிலர் நோய் வந்தாலே சா என்ற அச்சத்திலேயே இருக்க, வேறு சிலர் இது ஒரு வழமையான காய்ச்சல் போன்றது என எண்ணியுள்ளார்கள். ஒரு சமநிலையான அணுகுமுறை குறைவு (இது அமெரிக்க ஆய்விலும் தெரிய வந்தது).
  • நாங்கள் வேரோடு வேறொரு மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு இந்த மண்ணில் நடப்பட்டவர்கள். எனவே இயல்பாகவே சிக்கல்கள் எமக்குக் கூடுதலாகவேயிருக்கும். எனவே ஒப்பீட்டு ரீதியில் கூடியளவு எச்சரிக்கையடைய வேண்டியவர்கள் நாமே.

விழித்திருப்போம், உயிர்ப்போடு இருப்போம்,

வி.இ.  குகநாதன்