அஜந்தன் விடுதலை – சிறீலங்கா அரசின் போலியான குற்றச்சாட்டுக்கள் அம்பலம்

வவுணதீவில் சிறீலங்கா காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எந்தவித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் இன்று (11) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் அவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் வவுணதீவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் வழமைபோல எந்தவிதமான ஆதாரங்களையும் சேகரிக்காத சிறீலங்கா அரசும் அதன் காவல்துறையும் முன்னாள் போராளிகளை நோக்கி கையை காண்பித்திருந்தது.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு எவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மற்றும் எவ்வாறு தமிழ் மக்களை பொய்யாக தண்டிக்கின்றது என்பதற்கான அண்மையா சாட்சியமாக முன்னாள் போராளி அஜந்தன் உள்ளார்.

முன்னாள் போராளி அஜந்தன் கைது செய்யப்பட்டு ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கபட்டிருந்தார். சிறீலங்காவில் தடுப்புக்காகவில் உள்ள அரசியல் கைதிகளைப் போலவே அவரும் விசாரணைகள் இன்றி மற்றும் குற்றங்கள் உறுதிப்படுத்தாத போதும் தடுத்துவைக்கபட்டிருந்தார்.

விசாரணைகள் இன்றி தடுத்து வைப்பதற்கு சிறீலங்கா அரசிடம் உள்ள ஓரே ஆதாரம் தமிழர் என்ற சிறுபான்மை இனம் மற்றும் முன்னாள் போராளி என்ற பெயர். ஆனால் தற்போது வவுணதீவு தாக்குதலை மேற்கொண்டது சிறீலங்கா அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் துணையுடன் இயங்கி வரும் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது.

சிறீலங்கா படையினரால் பயிற்சிகள் வழங்கப்பட்ட இந்த அமைப்பே கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியிருந்ததுடன், அந்த தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழ் கிறிஸ்த்தவ மக்களை நோக்கி இலக்குவைப்பட்ட இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்கள்.

கைது செய்யப்பட்டவர்களே தற்போது வவுணதீவுத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் பொய் வழக்குகள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகி உள்ளது. அதாவது தமிழ் மக்களை நீதிக்குப்புறம்பாக சிறீலங்கா அரசு தண்டித்து வருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிக்குப்புறம்பான கைதுகள், கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் போகச் செய்தல் என்பவற்றை சிறீலங்கா அரசு அப்பாவித் தமிழ் மக்கள் மீது எவ்வாறு நிகழ்த்துகின்றது என்பதை அனைத்துலக சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும் இதன்மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாது இந்த சம்பவத்தை தமிழ் அமைப்புக்கள் அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதுடன், சிறீலங்காவில் உள்ள சட்டங்களை சிறீலங்கா அரச படையினர் எவ்வாறு தமிழ் மக்கள் மீது தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் நாம் வெளிஉலகின் முன் கொண்டுவரவேண்டும் என அரசியல் அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறீலங்கா அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், இவ்வாறான பழிவாங்கல் மற்றும் நீதிக்குப் புறம்பாக சாட்சியங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்டவர்களே. எனவே அவர்களையும் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
ஒரு சிறுபான்மை இனமக்களை சாட்சியங்கள் எதுவுமின்றி எழுந்தமானமாக கைது செய்வதும் விசாரணைகள் இன்றி குற்றங்களை உறுதிப்படுத்தாது தடுத்து வைப்பதும் இன ஒடுக்குமுறையின் வடிவங்களே.

அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் துன்புறுத்தப்பட்டவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு மீது சுயாதீன விசாரணைகளுக்கான கோரிக்கையை நாம் முன்வைப்பதுடன், அதற்கான ஆதரவுகளையும் அனைத்துலக மட்டத்தில் திரட்டவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.