மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் கையெழுத்துப்பெறும் போராட்டம்

132
40 Views

தமக்கான தொழில் நியமனத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் இன்று (21) காலை கையெழுத்துப் பெறும்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

கடந்த காலத்தில் தேர்தல்காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உடனடியாக அரச நியமனத்திற்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த கையெழுத்துப்பெறும்போராட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை ஆரம்பமாகியுள்ள இந்த கையெழுத்துப்போராட்டம் நாளை மாலை வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிதன் தெரிவித்தார்.

இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தேர்தல் காலத்தில் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்றும் நாளையும் சேகரிக்கப்படும் கையெழுத்துகள் மற்றும் தமது கோரிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுனரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினை விட இந்த அரசாங்கத்தின் மீது தாங்கள்
நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புவதாகவும் இதன்போது பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் 2300க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளதாகவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவது தொடர்பில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட்டதாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக சிலர் வேலைவாய்ப்பினை பெறும் வயதினையும் கடந்து தொழில்வாய்ப்பு பெறமுடியாத நிலையில் உள்ளதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே எதிர்வரும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இல்லாதுவிட்டால் மாகாண ரீதியில்
வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றுதிரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்போது பட்டதாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here