தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினை இலங்கையின் அரசியல் செல்நெறியாகிறது-ஆசிரிய தலையங்கம்

0
165

ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகச் செயற்பாட்டை அளவிடும் அலகுகளாக அந்த
நாட்டிலுள்ள மக்களின் மனிதஉரிமை, மக்களுக்கான நல்லாட்சி, மக்களுடைய
வளர்ச்சிகள் என்பன உள்ளன.

இந்நிலையில் 2015இல் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கவுன்சிலில் “இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் போன்றவற்றை மேம்படுத்தல்” என்ற தலைப்பில் இலங்கை அரசு இணை
அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 இலக்கத் தீர்மானத்தினை
இலங்கையின் புதிய அரசஅதிபர் கோட்டபாய ராஜபக்சாவும், இலங்கையின் புதிய
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவும், சர்வதேச ஒத்துழைப்பு
இராஜங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் நிராகரித்து மீளாய்வு செய்வதற்கான
நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் 2020 இல் தாங்கள் புதிய கருத்துக்களை முன்வைக்கப் போவதாகஇலங்கையின் புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவையும் தீர்மானித்துள்ளது.

இவை எல்லாமே இலங்கையில் 2009 இல் நடாத்தப்பட்ட மனிதாயத்திற்கு எதிரான
குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன குறித்த ஐக்கிய நாடுகள் சபையின்
விசாரணைகளையும் இதற்கு அனுசரணை வழங்கிய மேற்குலக நாடுகளின்
இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மேம்பட
எடுக்கும் முற்சிகளையும் தடுத்து நிறுத்துவதற்கான தந்திரோபாயங்களாக
அமைகின்றன.

இந்த முயற்சிக்கு அனைத்துலக மட்டத்தில் வரக்கூடிய விளைவுகளை
மெதுமைப்படுத்துவதற்கு இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற தனது நேசநாடுகளை இலங்கை உதவிக்கு அழைப்பதற்கான இராஜதந்திரச் செயற்பாடுகளும் இலங்கையில்முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கவுன்சிலுக்கு அளித்த வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் இலங்கைஅரசாங்கம் அனைத்துலக மட்டத்தில் சட்டபூர்வமான அரசு என்ற தகுதியை இழந்துதோற்ற அரசாக மாறிவிடும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் அதனைத் தாங்கள் எவ்வாறுசெய்யப் போவதாக வழிகளைத் தெரிவிக்காமல் புதிய அரச அதிபரிடம் இருந்துஅழைப்புக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளமை அவரின்தலைமைத்துவ ஆற்றலின்மையை மீளவும் வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் செல்நெறியாக
இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினை முதன்மை பெற்றுள்ளது. இந்த நேரத்தில்
புலம்பெயர் தமிழர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில்
நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கவுன்சில்
எந்தக் காரணத்தாலும் மாற்ற அனுமதிக்காது தொடர்ந்து அமுல் நடத்த வேண்டுமெனத்தாங்கள் தாங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்கள் வழியாகவும் அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் அமைதி பேண உழைக்கும் நிறுவனங்கள் வழியாகவும் அழுத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நேரமிது.

ஈழத் தமிழர்களின் மனித உரிமைக்கும், இலங்கையில் உள்ள தமிழ்பேசும் மக்களின்
மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைக் காப்பதற்கான புலம்பெயர்தமிழர்கள் எதிர்வரும் மார்கழி 10ம் நாள் கொண்டாடப்படவுள்ள அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை மையப்படுத்திச் செயற்திட்டங்களை உருவாக்கிநடைமுறைப்படுத்துவதை இலக்காக வைத்து உடனடியாக அனைத்துலக ஈழத்தமிழர்உரிமை மையத்துடன் இணைந்து செயற்பட அழைக்கின்றோம்.

இலக்கு மின்னிதழ் ஆசிரிய தலையங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here