தமிழர்கள் வாக்களிப்பதற்கு சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் எந்த வேட்பாளருமில்லை (நேர்காணல்) – அருந்தவபாலன்

0
163

எமது கட்சியினுள் எந்தவொரு வேட்பாளரையும் மையப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடுகள் இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இவருக்கு வாக்களியுங்கள் என்று எந்தவொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டக் கூடிய நிலையில் இல்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றோம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், கொள்கை பரப்புச் செயலாளருமான அருந்தவபாலன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காண லின்போது தெரிவித்தார். அதன் முழுவடிவம் வருமாறு…

கேள்வி:- தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையில் புதிய அரசியல் தளம் எவ்வாறிருக்கின்றது?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பல செயற்பாடுகளில் தொடர்ச்சியாக அதிருப்தியடைந்து வந்தேன். இதன் காரணமாகவே அக்கட்சியிலிருந்து வெளியேறும் தீர்மானத்தினை எடுத்திருந்தேன். தமிழ் மக்கள் கூட்டணியில் தற்போது இணைந்து பணியாற்றி வருவது திருப்தியாக உள்ளது.

தமிழரசுக் கட்சியில் தனி நபர்களின் நிகழ்ச்சி நிரலுக்கே முக்கியத் துவம் அளிக்கப்பட்டு வந்ததோடு, அந்த தீர்மானத்தின் பின்னால் அனைவரையும் வலிந்து செயற் படுத்தும் நிலைமையன்றே இருந்தது. இவ்வாறு பல விடயங்களை கூறிக்கொண்டே செல்லமுடியும். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்ததையடுத்து, சுதந்திரமாகவும், கொள்கை அடிப்படையிலும், கூட்டுத் தீர்மானத்தின் பிரகாரமும் செயலாற்றக்கூடிய சூழ்நிலைகள் இருப்பது மனநிறைவைத் தருகிறது.

மக்கள் நலனை மையப்படுத்திய ஆரோக்கியமான செயற்பாடுகளை நேர்மையாக முன்னெடுப்பதற்கான சூழல் தமிழ் மக்கள் கூட்டணியில் உள்ளது. ஆகவே தமிழ் மக்கள் கூட்டணியுடனான இணைந்த பயணம் எம்மைப்போன்றவர்களுக்கு உத்வேகத்தினை அளிப்பதாக உள்ளது.

கேள்வி:- தென்மராட்சிக்கான பாராளுமன்றபிரதிநிதித்துவம் நீண்டகாலமாக  வெற்றிடமாக இருந்த நிலையில் அதனை நிரப்புவதற்காக கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி உங்களுக்கும் வாக்குறுதி அளித்தி ருந்தல்லவா?

பதில்:- தமிழரசுக்கட்சி பொதுத்தேர்தலில் தென்மராட்சி மக்களின் வாக்குகளை கணிசமாக பெற்றிருந்தது. தேர்தல் முடிவுகளின் பின்னர் தென்மராட்சிக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் முன்கூட்டியே கூறினார்கள். காரணம், தென்மராட்சி மக்களின் எழுச்சியையும், கோபத்தையும், அடுத்த தேர்தல்களில் அவர்களின் வாக்குகளை மீண்டும் பெறுவதற்காகவுமே அவ்வாறு  கூறப்பட்டதே தவிர அம்மக்கள் மீதான உண்மையான நலனை மையப்படுத்தியதாக இல்லை என்பது தற்போது உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தென்மராட்சிக்கான பிரதி நிதித் துவத்தினை வழங்குவதற்கு எள்ளளவும் விரும்பமில்லாதவராக இருக்கின்றார். இதனை பிரதேச மக்களையும் கடந்து வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் உணர்ந்து கொண்டுள்ளனர்.

கேள்வி:- ஐந்து கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கைகளுடன் இணக்கப்பாட்டினை எட்டியிருந்தபோதும் சனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியாது போனமைக்கு காரணம் என்ன?

பதில்:- சனாதிபதி தேர்தலில் ஆறுகட்சிகள் இணைந்து இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்கு முயற்சித்தபோதும் ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி விலகியிருந்தது. அதன் பின்னர் ஏனைய கட்சிகள் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தன. இருப்பினும், தமிழரசுக் கட்சியானது முன்னுக்கு பின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது. இதனால் தான் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற கூட்டங்களின்போது, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, தாங்கள் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தினை முன்னிலைப்படுத்தி பக்கம் சார்ந்த கருத்துக்களை வெளியிட்டமையோடு ஏனைய கட்சிகளையும் தமது தீர்மானத்திற்கு ஆதரவாக அரவணைக்க வேண்டும் அந்த முயற்சி கைகூடாத பட்சத்தில் ஏனைய கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடவேண்டும் என்ற வகையில்தான் அமைந்திருந்தன. அதேநேரம், மாவை.சேனாதிராஜா தான் கட்சியின் தலைவர் என்ற வகையில் முடிவெடுக்க முடியாதவராகவும் கூட்டத்தில் பங்கேற்காத வேறு நபர்களில் தங்கியிருந்து முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைக்குள்ளும் இருந்தார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. இதனால் இறுதிவரையில் முடிவுகளை எடுக்க முடியவில்லை. குறிப்பாக தபால் மூல வாக்களிப்பிற்கு முன்னர் கூட உரிய தீர்மானத்தினை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்தே, எமது கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் எமது கட்சியின் நிலைப்பாட்டினை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஊடக

அறிவிப்பொன்றைச் செய்திருந்தார். இந்த அறிவிப்பானது ஈற்றில் ஐந்து கட்சிகளினதும் தபால் மூலமான வாக்களிப்பு குறித்த தீர்மானத்திற்கு வழியமைப்பதாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கேள்வி:-அனைத்துக் கட்சிகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப் பட்டதன் பின்னர் ஐந்து கட்சிகளும் கூடி இறுதி தீர்மானத்தினை அறிவிப்பதாக கூறப்படுகின்றமையை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:-தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் உடனடிக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 13 அம்சக் கோரிக்கைகளுக்கு நிகரான விடயங்கள் எந்தவொரு பிரதான சனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாமும், ஈ.பி.ஆர்.எல்.எப்,ரெலோ ஆகிய கட்சிகளும் இருக்கின்றோம். ஆகவே எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு சுட்டமுடியாது என்ற

அறிவிப்பினை வெளியிடுவதே சமயோசித மானது என்ற நிலைப்பாடும், கட்சிகளுக்கு இருந்தன. இருப்பினும் அந்த முடிவினை

அறிவிப்பதற்கு தமிழரசுக்கட்சி விரும்பவில்லை. குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன், 13 அம்சக்கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நிச்சயமாக அமையும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில்தான் தோதல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் மீண்டும் கூடுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்த பின்னர் தான் ஐந்து கட்சிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையும் என்று கூற முடியும்.

கேள்வி:-தமிழர் அரசியல் வரலாற்றில் எழுத்துமூலமான ஒப்பந்தங்களே தென்னில ங்கை தலைவர்களால் கிழித்தெறியப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விஞ்ஞானப த்தினை மையப்படுத்தி எடுக்கப்படும் தீர்மானம் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என்று எவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்க முடியும்?

பதில்:- தந்தை செல்வா காலத்திலிருந்து எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டும், உடன்படிக்கைகள் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டும் தான் வந்திருக்கின்றமை தமிழர் அரசியல் வரலாறு. அவ்வாறிருக்கையில் எதிர்காலத்திலும் தென்னிலங்கை தலைவர்களுடன் செய்துகொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு என்ன நடக்கும் என்பதிலும் கேள்விகள் காணப்படுகின்றன. அதனைவிடவும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளியிடப்படுகின்ற விடயங்கள் நடைமுறைக்கு வரும் என்று நம்புவதற்கில்லை. மேலும், தமிழர்களின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு நோக்கிய விடயத்தினை கையாளுகின்றபோது இலங்கைத்தீவினுள் இவ்வாறான சனநாயக முறையிலான விடயங்களையும் விரும்பியோ, விரும்பாமலோ கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தென்னிலங்கை தலைவர்களின் மனநிலைகளை நாம் அறிந்துள்ளபோதும் ஏற்படுகின்ற இக்காட்டான சூழல்களில் எமது கோரிக்கைகளை முன்னிறுத்தி முயற்சிகளை மேற்கொள்வதில் தவறில்லை.

கேள்வி:- தமிழ் மக்களின் கோரிக்கைகளை கோத்தபாய நிராகரித்துவிட்ட நிலையில், சஜித் பிரேமதாஸவைச் சார்ந்து தமிழ் தரப்பினர் எடுக்கும் தீர்மானம் எவ்வளவு தூரம் சாதகமான நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- பிரதான வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையில் வாக்குகளைப் பெறுவதற்காக தாமே இனவாதத்தினை உருவாக்கி அதன் கைதிகளாக உள்ளார்கள். அத்துடன் அவர்கள் மகாவம்ச மனநிலையில் இருந்து வெளியில் வரமுடியாதவர்களாக உள்ளார்கள். அவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கூட கருத்திற்கொண்டு பார்க்கின்ற நிலையில் அவர்கள் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. மக்கள் விடுதலை முன்னணி முற்போக்கான சிந்தளையாளர்களாக இருந்தாலும் அவர்களிடத்திலும் தென்னிலங்கையை மையப்படுத்தி சிங்கள தேசியவாதம் வேரூன்றி உள்ளது. ஏறக்குறைய அவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே உள்ளார்கள். இவ்வாறிருக்க சஜித் பிரேமதாஸவை சார்ந்து முடிவெடுப்பது என்ற விடயத்தில் சீர்தூக்கி பார்கின்றபோது, எமது கட்சியினுள் எந்தவொரு வேட்பாளரையும் மையப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடுகள் இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இவருக்கு வாக்களியுங்கள் என்று எந்தவொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டக்கூடிய நிலையில் இல்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றோம். சில தரப்புக்கள் அவர் சார்ந்து முடிவுகளை அறிவிக்கலாம். ஆனால் அது தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவாக அமையப் போவதில்லை.

கேள்வி:-சஜித் பிரேமதாஸ வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் பிரதமர் ரணிலை மையப்படுத்தி பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முனைகின்றமை ஏன்?

பதில்:- சஜித்பிரேமதாஸ தமிழ்த் தரப்பினை பகிரங்கமாக சந்திப்பதற்கு தயங்குகின்றார்கள். மேலும் ரணிலுடன் சில தமிழ்த் தரப்பினருக்கு காணப்படும் நெருக்கமான உறவுகளை பயன்படுத்தி அவர் ஊடாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. அதேபோன்று சஜித் பிரேமதாஸவும் ரணில் ஊடாக தமிழர் தரப்புக்கான காய்களை நகர்த்துவதாகவே அறிய முடிகின்றது. பொதுவாகவே ரணில், காய் நகர்த்துவதில் நரித் தந்திரங்களை கொண்டவர் என்ற மனநிலை அனைவரிடத்திலும் உள்ளது.

அத்துடன் அவருடைய அரசியல் இருப்பு எவ்வாறு எதிர்காலத்தில் அமையவுள்ளது என்பதும் கேள்விக்குறியாகின்றது. இந்நிலையில் அவர் வழங்குகின்ற வாக்குறுதிகள் அதுசார்ந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் எவ்வளவு துரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியான விடயமொன்றே.

கேள்வி:- ஐந்து கட்சிகளை ஒரு கூட்டாக கொண்டுவருவதற்கு இந்தியா பின்னணியில் இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார். அதுமட்டுமன்றி உங்களுடைய கட்சி பிறிதொரு கூட்டை அமைப்பதற்கான முஸ்தீபுகளைச் செய்கின்றபோதும் அதன் பின்னணியிலும் இந்தியா இருப்பதாக கூறுகின்றாரே?

பதில்:-முதலாவதாக, கஜேந்திரகுமார் கூறுவது போன்று இந்தியாவின் கைப் பொம்மையாக எமது கட்சி இருக்கவில்லை. அத்துடன் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் எமது கட்சி இயங்கவில்லை. எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள அரசியல் உறவு கட்சியென்ற வகையில் மட்டுமே உள்ளது. மேலும் ஏனைய கட்சிகள் அனைத்தும் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறி தன்னை வேறுபடுத்திக் காண்பிப்பதற்கு முனைகின்றார். அடுத்து, ஐந்து கட்சிகளும் 13 அம்சங்களில் பொது இணக்கப்பாட்டினை எட்டி, கையப்பமிட்டன. இந்த 13அம்சங்களையும் கஜேந்திரகுமாரும் ஏற்றிருந்தார். 13 அம்சங்களுக்கான ஆராய்விலும் இறுதி செய்வதிலும் அவரும் நேரடியாக பங்கேற்றிருக்கின்றார். இடைக்கால அறிக்கை என்ற விடயத்தால்தான் அவர் கையப்பமிடும் சந்தர்ப்பம் ஏற்படாது போனது. ஆகவே 13அம்சக் கோரிக்கைகளும் இந்தியாவினுடையவை என்றும் இந்தியாவை திருப்திபடுத்துவதற்காக தயாரிக்கப்பட்டவை என்றும் அவரால் எந்த அடிப்படையில் கூறமுடியும் என்ற கேள்வியும் இங்கு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here