தேசிய மக்கள் சக்தியும் அடிப்படையில் ஒரு இனவாத கட்சியே என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்த்தரப்பில் இருந்து அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில் அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
“மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தயக்கம் காட்டுவதைப் போலவே தெரிகின்றது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தமது வாக்குகள் குறைந்துவிடும் என்ற அச்சம். இரண்டாவது தமிழர்களுக்கு ஒரு அரசியல் களம் கிடைத்துவிடும் என்ற அச்சம். தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுவது அவசியம் என்றும் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிட்டால் வட மாகாண சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் கைப்பற்றுவது கடினமாகவே இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் எளிமையான நடத்தை, போதைவஸ்துக்கும், ஊழலுக்கும் எதிரான அவர்களது செயற்பாடு தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை கவர்ந்து வருகின்றது என்றும் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.