உலக வறுமை ஒழிப்பு நாள் : இலங்கையில் ஒரு வேளை உணவுக்கே இழுபறி -சமூக செயற்பாட்டாளர் ஆர்.கவிந்து பத்திரண

ஐ.நா.வின் அனைத்துலக உணவு நாள் மற்றும் வறுமை ஒழிப்புநாள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஆர்.கவிந்து பத்திரண இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி, 

 கேள்வி:-

உலகின் சனத்தொகைக்கேற்ப உணவுத் தேவை பூரணமாகவுள்ளதா?

பதில் :-

அப்படிச் சொல்வதற்கில்லை.உலகின் சனத்தொகை வளர்ச்சி வேகமாகவுள்ளது.எனினும் இந்த வளர்ச்சி வீதத்திற்கேற்ப உரிய உணவினை பெற்றுக் கொள்வதென்பது கேள்விக்குறியான ஒரு விடயமேயாகும்.

உலகம் இன்று சகல துறைகளிலும் முன்னேறிக்கொண்டு செல்கின்றது.இதற்கேற்ப சனத்தொகையும் அதிகரித்து செல்கின்றது.குறிப்பாக ஆபிரிக்கா, எத்தியோப்பியா, சூடான போன்ற பல வறிய நாடுகளின் சனத்தொகை அபிவிருத்தி அடைந்த நாடுகளின் சனத்தொகையைக் காட்டிலும் வேகமான அதிகரிப்பினை வெளிப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இது மோசமான ஒரு நிலையாகும். ” மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த” கதைக்கு ஒப்பான ஒரு செயல் இதுவாகும்.அதாவது வறிய நாடுகள் ஏற்கனவே சனத்தொகை அதிகரிப்பு காரணமாக திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்றன.சனத்தொகைக்கு ஏற்ப உணவின்றி சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன.இருப்பிட வசதிகளும் அபாயகரமான நிலைமையினை எட்டியுள்ளன.

பசி, பட்டினி, பஞ்சம் என்பன இத்தகைய நாடுகளில் தலைவிரித்தாடுகின்றது.மக்கள் உணவுக்கு வழியின்றி பட்டினிச்சாவை எதிர்கொண்டு வருகின்றனர்.இது கொடுமையிலும் கொடுமையாகும்.””தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி என்ற ஒரு தமிழ்க் கவிஞன் பாடி இருப்பதாக எனது நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி அல்லல்படும் நிலையினை பார்க்கையில் மனம் வேதனையடைகின்றது.ஒரு சாண் வயிற்றுக்கு உணவில்லாமல் அல்லல்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.

 சமகால நிலைமைகளை நாம் நோக்கும்போது விவசாயத்துறை தொடர்பான நாட்டம் அல்லது ஈடுபாடு என்பது குறைந்து கொண்டே வருகின்றது.அநேகமானவர்கள் வெள்ளைக் காற்சட்டை உத்தியோகத்தினை தேடியலைகின்றார்களே தவிர வயலில் இறங்கி வேலை செய்வதற்கோ அல்லது ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ தயக்கம் காட்டுகின்றனர்.இதனால் உலகலாவிய ரீதியில் விவசாய உற்பத்திக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.நெல் உற்பத்தி குறைவடைந்துள்ளது.அத்தோடு இன்னும் சில இடங்களில் விவசாய விளைநிலங்கள் அபிவிருத்தி என்னும் பெயரில் வேறுபல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.   தொழிற்சாலை உருவாக்ககம் மற்றும் ஏனைய பல கட்டிட நிர்மாணங்கள்  பலவும் இதில் உள்ளடங்கும்.இதன் காரணமாகவும் விவசாய உற்பத்திகள் தடைப்படுகின்றன.இதனாலும் உரிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதென்பது பெரும் சவாலாகவுள்ளது என்பதனையும் கூறியாக  வேண்டும்.

 விவசாயத்தொழில் என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு தொழிலாக கருதப்படுகின்றது.விவசாய உற்பத்தியினை நாம் பெருக்கும்போது நாட்டின் அபிவிருத்தி, உணவுத்தேவை என்பன சாத்தியமாகும்.இளைஞர்கள் இதனை மனதில் இருத்திக் கொண்டு செயற்படுதல் வேண்டும்.விவசாயத்தின் சிறப்பினை புரிந்து கொள்ளுதலும் வேண்டும்..இலங்கையைப் பொறுத்தவரையில் திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார்.இதனால் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்த நிலையில் இறக்குமதி கட்டுப்பாடு நிலவியது.உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பால் சில விவசாய பொருட்களில் நாடு தன்னிறைவு கண்டதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.இத்தகைய  வழிமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு நாட்டின் உணவுத்துறை பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி இடப்பட  வேண்டியது அவசியமாகும்.

கேள்வி :-

இலங்கையின் உணவு நிலைமைகள் எவ்வாறுள்ளன?

பதில்:-

இலங்கை அண்மைக்காலமாக உணவு நிலைமைகளில் திருப்தியற்ற வெளிப்பாடுகளைக் கொண்டு விளங்குகின்றது.கொரோனா போன்ற நிலைமைகளால் இலங்கையின் உணவுற்பத்தி சிக்கல் நிலையை எதிர்நோக்கி இருந்தது.கொரோனா காலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஸ்தம்பித நிலை எதிரொலித்தது.இதன் தாக்கமானது இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.உணவுற்பத்தி தொடர்பில் இலங்கை எதிர்கொண்ட முக்கிய சவாலாக இரசாயன உரப் பாவனை தடைசெய்யப்பட்டமை விளங்குகின்றது.முன்னாயத்த அல்லது தூரநோக்கற்ற நிலைமை இல்லாத நிலையில் இரசாயன உரப் பாவனை இடைநிறுத்தப்பட்டமையால் விவசாயிகள் பெரிதும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

விவசாயிகள் பலர் கடன்களை பெற்றே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமது விவசாயம் முடக்கப்படும் நிலையில் அவர்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாது அல்லல்படுகின்றனர்.சிலர் கடனை திருப்பி செலுத்த முடியாது பிழையான முடிவுகளுக்கும் தள்ளப்படுவது வருந்தத்தக்க ஒரு விடயமாகும்.இரசாயன உரப்பாவனை தடை நிலைமை காரணமாக பல விவசாயிகள் தமது‌ விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு விலகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் உணவுத் தேவை அதிகரித்துள்ளது.இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இலங்கை சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதோடு இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டி வருவது நீங்கள் அறிந்ததேயாகும்.எனினும்‌ தொடர்ந்தும் இலங்கை ஏனைய நாடுகளில் தங்கி இருக்க முடியாது என்பதையும் விளங்கிச் செயற்படுதல் வேண்டும்.

கேள்வி:-

இலங்கை மக்களின் போஷாக்குணவு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றதே!

பதில்:-

இலங்கை மக்களின் ஒரு வேளை உணவே கேள்விக்குறியாக உள்ள நிலையில் போஷாக்குணவு குறித்து எள்ளளவும் சிந்தித்துப் பார்க்க முடியாதுள்ளது.ஒரு மனிதன் மூன்று வேளை உணவுண்பது வழக்கமாகும்.எனினும் இலங்கையில் 40 வீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள் ஒரு வேளை உணவை மட்டுமே உண்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளதாக செய்திகள் வலியுறுத்துகின்றன.பின்தங்கிய நிலையில் உள்ள மலையக மக்கள் இதில் அதிகமாகவே உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி அல்லல்படும் இம்மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்க்கையைக் கொண்டு நடாத்துகின்றனர் என்பதும் தெரிந்த விடயமாகும்.இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு பன்மடங்காக உயர்வடைந்துள்ளது.கோதுமை மாவின் விலையும் இதில் உள்ளடங்குகின்றது.மலையக மக்கள் வேலைப்பளுவுக்கு மத்தியில் கோதுமை மாவினால் செய்யப்பட்ட உணவுகளை அதிகமுண்பதால் மாவின் விலையில் அதிகரிப்பு அவர்களை வெகுவாக பாதித்துள்ளது.

இலங்கையின் உணவுத் தட்டுப்பாடு போஷாக்கான உணவினை கேள்விக்குறியாகியுள்ளது.இதனால் சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர் ஆகிய தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.போஷாக்கற்ற நிலைமைகளால் நோய்கள் பலவற்றுக்கும மக்கள் ஆளாகின்றனர்.அத்தோடு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக மாறுகின்ற வாய்ப்பும் அதிகமுள்ளது.மாணவர்களிடையே காணப்படுகின்ற போஷாக்கற்ற அல்லது மந்தபோஷண நிலைமை காரணமாக அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது.அவர்களின் அடைவு மற்றும் கிரகிப்பு நிலைமைகள் வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளன.இது. அறிவுமையச் சமூக உருவாக்கத்திற்கு பெரிதும் தடையாகவுள்ளது.கல்வியால் முன்னேற வேண்டிய சமூகங்களின் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

 இலங்கையில் பத்து மாணவர்களுக்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் மந்தபோஷணை அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.குறைபோஷாக்கு அதிகரித்த தாக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதிலிருந்தும் இலங்கையர்களை காப்பாற்ற வேண்டிய ஒரு தேவை மேலெழுந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இதனடிப்படையில் யுனிசெப் உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கைக்கான உதவியினை விரிவுபடுத்தி வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.” இன்றைய சிறுவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள்” என்பார்கள்.இந்த வகையில் நாளைய சமூகத்தை திடகாத்திரமான சமூகமாக உருப்பெறச் செய்வதற்கு போஷாக்குணவில் கவனம் செலுத்துவது மிகமிக அவசியமாகும் என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.

நேர்காணல்:-துரைசாமி நடராஜா