உலக சுகாதார தினம் 2026: டெல்லியில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரை

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு என்பன இணைந்து புதுடில்லியில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் தலைவராகவும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கையின் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அங்கு விசேட உரையாற்றினார்.

அதில்,

அறிவியலுடன் ஒன்றிணைந்து சுகாதாரத்திற்காக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளில் 2026.  உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்த முக்கிய நிகழ்வை முன்னின்று நடத்தும் இந்திய அரசுக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கும் எனது மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டின் தொனிப்பொருள் மிக முக்கியமானது.  ஏனெனில் அறிவியலே பொதுச் சுகாதார முன்னேற்றத்தின் அடிப்படைத் தூணாகும். தொற்றாத நோய்கள் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில், அனைவரும் ஒற்றுமையுடனும் பலமான கூட்டுப் பொறுப்புடனும் அவற்றை முறியடிக்க ஒன்றிணைய வேண்டும்.

இலங்கையின் சுகாதாரத் துறையானது நீண்டகாலமாக முறையான கொள்கைகளின் அடிப்படையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது. குறிப்பாகத் தாய் – சேய் ஆரோக்கியம், நோய்த் தடுப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய துறைகளில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளோம். அறிவியல், சமத்துவம் மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் ஒரு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை இலங்கை பேணி வருகின்றது. 2026 – 2028 காலப்பகுதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான விசேட வேலைத்திட்டம்’ எமது பிராந்தியத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இது மக்களை மையப்படுத்திய சுகாதாரக் கட்டமைப்பை நோக்கிய எமது தூரநோக்கினைப் பிரதிபலிக்கிறது. அதேபோல், இலங்கை 2026 – 2035 தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் தனது பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. பிராந்திய ரீதியான சுகாதார மேம்பாட்டிற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும், பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தவும் இலங்கை எப்போதும் தயாராக உள்ளது. அத்துடன், மனிதர்களின் ஆரோக்கியம் மாத்திரமன்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சூழலமைப்பின் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ள  ஆரோக்கியம் ஒன்றே  எனும் அணுகுமுறை குறித்து உலகளாவிய ரீதியில் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.