ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது-உலக வங்கி அதிகாரி

இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்பெருந்தொற்று நிலைமை உருவாகும் வரை இலங்கை மோசமான வறுமையை இல்லாதொழிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது உறுதியான மற்றும் நம்பகத்தன்மை மிக்க நிதி கட்டமைப்பு சீர்திருத்த வேலை திட்டத்தை உறுதி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிலையான வளர்ச்சிப்பாதையில் திரும்புவதற்குமான ஒரு வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006 முதல் 2016 முதல் மிகமோசமான வறுமையை ஒழிப்பதை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருந்தது 11 வீதத்திலிருந்து 1.3 வீதமாக குறைந்து காணப்பட்டது 2 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்துமீட்கப்பட்டனர் எனவும் உலக வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று இலங்கை முழுவதும் விவசாயிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியோர வியாபாரிகள் அரசஊழியர்கள் தனியார் உரிமையாளர்கள் என அனைவரும் வாழ்க்கையை கொண்டு செல்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்,இந்த பொருளாதார நெருக்கடி பல வருட முன்னேற்றத்தை பாதித்துள்ளது,நாடு 2009 இன் பின்னர் அதிகளவான வறுமையை எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.