மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு லண்டனில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு திட்டமிட்டதாக இருக்கலாம். அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்ற போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாளர்கள் ஜே.வி.பி.யை எதிர்ப்பதாலேயே லண்டனில் டில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சிலர் கூறலாம். ஆனால் உண்மையில் அங்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு கொள்கை ரீதியிலானதல்ல.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிதியைப் பெற்றுக் கொண்ட போது வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.
தொல்பொருள் ஸ்தானங்களில் பெயர் பலகைகள் அகற்றப்பட்டதையும் மாவீரர் நினைவு தினத்தை தாம் விரும்பியவாறு அனுஷ்டிப்பதற்கு சுதந்திரமாக இடமளித்தை மறைப்பதற்காகவும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள் எமக்கும் எதிரானவர்கள் என்று காண்பிப்பதற்காகக் கூட இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.



