இலங்கை போல அமெரிக்கா வீழ்ச்சி அடையுமா? – இதயச்சந்திரன்

ஜூன் முதலாம் திகதியன்று கடன் மட்டத்தை (Debt Ceiling. Now $31.8 trillion) அதிகரிக்காவிட்டால், சிரிலங்காவில் நடந்தது போல், அமெரிக்கா கடன் செலுத்த முடியாத கையறுநிலைக்கு( Default) செல்லும்.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கடன் மட்டத்தை உயர்த்தச்சொல்லி அழுத்தம் வரும். ஆளும்- எதிர்க்கட்சிகளிடையே மோதல் வரும். ஆனாலும் இறுதியில் கடனளவை உயர்த்த உடன்படுவார்கள். இந்தத் தடவை எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியானது அதிகமாக முரண்டு பிடிக்கிறது.

மக்களின் மற்றும் கார்ப்பரேட்களின் வரியை உயர்த்தச் சொல்கிறார்கள். அரசின் செலவுகளை குறைக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால் பைடனின் ஜனநாயக்கட்சியானது மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்குமென குடியரசுக் கட்சி கணக்குப் போடுகிறது.

கடன் வாங்கும் அளவினை உயர்த்தாவிட்டால் பங்குச் சந்தை சரிந்து விடும், சீனா வளர்ந்து விடுமென கிலியை ஏற்படுத்துகிறார் ஜோ பைடன்.திறைசேரி செயலாளர் ஜெனட் ஜெலன் அம்மையாரும் கைவிரித்து விட்டார்.

இருப்பினும் ஜூன் முதலாம் திகதியன்று ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இணைந்து சமரசமாகி, கடன் அளவை உயர்த்தி, பங்குச் சந்தை, முறிச்சந்தை, நாணயச்சந்தை என்பன சரிந்துவிடாமல் காப்பாற்றிவிடுவார்கள்.ஏனெனில் சந்தைகளில் முதலீடு செய்திருக்கும் அதிகார வர்க்கத்தினர், அதனை அழியவிட மாட்டார்கள்.

அமெரிக்க நிதிநிர்வாகம் default நிலைக்குச் சென்றால், தற்போது 103.5 ஆக இருக்கும் டொலர் சுட்டெண் மிக மோசமாக வீழ்ச்சியடையும். வெளிநாடுகளின் கையிருப்பிலுள்ள (reserve) டொலர் வீழ்ச்சியுற்று, உலகப் பொருளாதாரமே ஆட்டம் காணும் நிலை ஏற்படும்.இதனை ஆளும்-எதிர்த்தரப்பு அமெரிக்க அதிகார வர்க்கம் விரும்பாது.ஆகவே கடலளவுள்ள கடன் மட்டத்தை அமெரிக்கா மேலும் உயர்த்தும்.