13 வது திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக பௌத்தமதகுருமாரை சந்திக்க விருப்பம்-சி.வி விக்னேஸ்வரன்

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேசுவதை நிறுத்தியுள்ளார் என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய யாழ்ப்பாண விஜயத்தின் போது ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என என்னிடம் தெரிவித்திருந்தார் என  விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பௌத்தமதகுருமாரின் எதிர்ப்பை தொடர்ந்து அது குறித்த முயற்சிகளை ஜனாதிபதி கைவிட்டுள்ளார் அவர் அது குறித்து பேசுவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 13வதுதிருத்தம் தொடர்பான தனது திட்டத்தை கைவிட்டுவிட்டார் என நான் கருதவில்லை ஆனால் மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பினால் அதனை அவர் ஒத்திவைத்துள்ளார் என நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் நான் மகாநாயக்க தேரர்களிற்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளேன் சமீபத்தில் நான் எழுதிய கடிதத்திற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் அவர்களை சந்தித்து இது குறித்து தெளிவுபடுத்த தயார் அவர்கள் உரிய தெளிவின்றி 13வது திருத்தத்தை எதிர்க்கின்றனர் நாங்கள் உரிய விடயங்களை தெளிவுபடுத்த தயார் ஆனால் அவர்கள் எங்களை சந்திக்க தயாரில்லை எனவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் 13திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.